அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க விவகாரம்.. சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேரின் தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்ட தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13 ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, அதிமுக கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த 25 பேரில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் அளித்தனர். இதனால் அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட்டு அதனை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 25 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து கொறடா உத்தரவை மீறிய எம்எல்ஏக்கள்மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவருக்கு மனு கொடுத்தார்.
இந்நிலையில் 25 எம்எல்ஏக்களில் 4 பேர் ராஜினமா செய்தனர். அதேவேளையில் 21 பேர் அதிமுக தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதனை ஏற்றுக்கொண்டு எந்த விசாரணையும் இன்றி எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
முதலாவதாக 21 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்படுகிறது. அதுகுறித்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் எப்படி நடவடிக்கையை சபாநாயகர் கைவிட முடியும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் 2(1)பிரிவின் கீழ் செல்லுபடியான மன்னிப்பு மற்றும் திரும்பெப்பெறுதலை உள்ளடக்குகின்றனவா?
கட்சித் தாவல் நடவடிக்கை தொடங்கிய பின்னர் இவ்வாறு மன்னிப்பு வழங்க முடியுமா, எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை கைவிட முடியுமா, இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விளக்கத்துடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்." எனக் கோரியுள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
