செப்.12 இல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் மனு!
டெல்லி: இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுக்கு தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த தேர்வால் மருத்துவக் கனவு கானல் நீராகிவிடுவதை எண்ணி மாணவர்கள் தற்கொலை செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

16 மாணவர்கள்
இந்த தேர்வால் தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 16 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்கள். இப்படியிருக்க இந்த தேர்வில் வெளிமாநிலங்களில் ஆள்மாறாட்டம், முறைகேடு உள்ளிட்ட சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முறைகேட்டை தவிர்க்க எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டாலும் வெளிமாநிலங்களில் நடக்கும் முறைகேடுகளை பார்த்தால் தேர்வு மையத்தில் நடக்கும் சோதனைகள் எல்லாம் கண்துடைப்பா என்ற சந்தேகத்தை வலுக்கிறது.

செப்டம்பர் 12
இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வானது கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள்கள் சில நீட் பயிற்சி மையங்களுக்கு முன் கூட்டியே வெளியானதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் அந்த தேர்வுக்கான விடையை கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு விடைகளை பெற்று தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு விநியோகம் செய்து முறைகேடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பலர் கைது
இது தொடர்பாக பயிற்சி மையத்தின் தலைவர், சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் கடை நிலை அதிகாரிகள், தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் நீட் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு நாக்பூரில் ஒருவர் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவை மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் முறைகேடு தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு
இந்த நிலையில் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் மம்தா ஷர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்த மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையும் வழக்கறிஞர் மம்தா தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். வினாத்தாள் லீக், ஆள்மாறாட்டம், தேர்வு மையத்திலேயே விடைத்தாள் வெளியீடு, ப்ளூதூத் மூலம் ஹைடெக் முறைகேடு உள்ளிட்டவை நடைபெற்றுள்ளதால் இந்த தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்றும் அதுவரை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடாது, நீட் மறுதேர்வின் போது தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் கருவிகளை பொருத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications