மோடியா நிலவுக்கு விண்கலம் அனுப்பினார்? பாஜகவின் தேர்தல் கருவியாகும் இஸ்ரோ! மஹூவா மொய்த்ரா அட்டாக்
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் இஸ்ரோவை கருவியாக பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு பிரதமர் மோடியா நிலவுக்கு சந்திரயான் -3யை ஏவினார்? என கேள்வி கேட்டு சாடியுள்ளார்.
நிலவின் தென்துருவ ஆய்வுக்கான சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதையடுது்து கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன்மூலம் இந்திய விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்தது.

அதாவது நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு இந்தியா 4வது இடம் பிடித்தது. அதோடு நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையும் கிடைத்தது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணத்தை நேற்று முடித்த பிரதமர் மோடி நேரடியாக பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து கூறினார்.
அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது , ‛‛சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியபோது நான் இந்தியாவில் இல்லை. ஆனால் என்னுடைய மனம் முழுவதும் இங்குதான் இருந்தது. கடைசி 15 நிமிடம் பரபரப்பு தொற்றி கொண்டது. முதலில் இந்தியாவுக்கு போக வேண்டும். அதுவும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு போக வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றியது.இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக உங்களுக்கு சல்யூட் செய்கிறேன்.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயரிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல கடந்த 2019ம் ஆண்டு சந்திராயன் 2 விழுந்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என்று அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை குறிப்பிடவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது'' என்றார்.
இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பெயரிடப்பட்டுள்ளதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு இஸ்ரோவின் வெற்றியை பாஜக தனக்கான வெற்றியாக மடைமாற்றம் செய்கிறது எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் இஸ்ரோ விவகாரத்தில் பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரோவை தேர்தல் கருவியாக மாற்ற பாஜக முயற்றசிக்கிறது. இதற்காக பாஜக ஆதரவு பக்தர்கள் 24 மணிநேரமும் பிரசாரம் செய்ய உள்ளதாக அவர் சாடியுள்ளார். இதுபற்றி மஹூவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‛‛2024 தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக இஸ்ரோ மாறி இருக்கிறது. தேர்தலுக்கு முன் தேசியவாதத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு பணியும் பயன்படுத்தப்படும். பல தசாப்தங்களாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி என்பது வளர்ந்து வருகிறது. ஆனால் அதனை மோடியின் சாதனையாக பாஜக ஆதரவு பக்தர்கள் 24 மணி நேரமும் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வார்கள்.
இஸ்ரோவின் விண்கலம் நிலவில் தரையிறங்கியது இது முதல் முறை அல்ல. அதோடு, விண்கலத்தை தரையிறக்கிய பணியை நரேந்திர மோடி செய்யவில்லை. மேலும் சந்திரயான் வடிவமைக்கும் பணியை பாஜகவின் ஐடி பிரிவும் மேற்கொள்ளவில்லை. விழித்து கொள்ளுங்கள் இந்தியா. நான் ஒன்றும் தேசவிரோதி அல்ல" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications