செங்கோல் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த பிரதமர் மோடி.. பயபக்தியுடன் எடுத்துச் சென்று நிறுவினார்!
புதுடெல்லி : செங்கோலின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி. ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக காலையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை, தமிழ்நாட்டு ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.
இதற்காக நேற்று தமிழ்நாட்டு ஆதீனங்கள் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமரிடம் ஆதீனங்கள் செங்கோலை வழங்கினர். மந்திரங்கள் முழங்க செங்கோல் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி செங்கோல் முன் தலை வணங்கினார். பூஜையின் போது, ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து பிரதமர் மோடி அதனை வணங்கினார். பின்னர் அதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் மக்களவைக்குள் எடுத்துச் சென்றார்.
பயபக்தியுடன் பிரதமர் மோடி செங்கோலை தலைவணங்கியபடியே எடுத்துச் சென்றார். தமிழ்நாட்டு ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்ற மக்களவை வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications