மொத்தமா மாற போகுது! ரூ.50,000 கோடி மதிப்பில் 8 அதிவேக சாலை திட்டங்களுக்கு..மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நமது நாட்டில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் எட்டு அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நமது நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பிற்கு மிகப் பெரிய பூஸ்டை தரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.
நமது நாட்டில் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் பல புதிய சாலைப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதிலும் குறிப்பாகச் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் குறைந்த செலவில் விரைவாக எடுத்துச் செல்ல தனியாக அதிவேக சாலைகள் முக்கியமானது. இதன் கட்டுமானத்தில் மத்திய அரசு இப்போது கவனம் செலுத்தி வருகிறது.
எட்டு அதிவேக சாலை திட்டங்கள்: இதற்கிடையே இப்போது நாடு முழுக்க புதிதாக எட்டு அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான தகவலைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இது மது நாட்டின் சாலை போக்குவரத்திற்கு மிகப் பெரிய பூஸ்டை தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் உள்கட்டமைப்பிற்கு மிக பெரிய பூஸ்ட் கிடைத்துள்ளது. ரூ. 50,000 கோடி மதிப்பில் நாடு முழுக்க எட்டு அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நமது பொருளாதார வளர்ச்சியில் பல பாசிட்டிவ் விளைவை ஏற்படுத்தும்.. மேலும் இவை வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். வரும் காலத்தில் இந்தியாவின் போக்குவரத்து உட்கட்டமைப்பு எப்படி இருக்கும் என்பதை இது காட்டுவதாக இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
செலவு எவ்வளவு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமையவுள்ள இந்த எட்டு தேசிய அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 936 கிமீ நீளத்திற்கு மொத்தம் ரூ. 50,655 கோடி செலவில் இந்த கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் நாடு முழுவதும் கட்டுமான இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றை இந்தத் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த திட்டங்கள்: இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நாட்டில் சுமார் 4.42 கோடி நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள சாலை திட்டங்கள்
6 லேன் ஆக்ரா- குவாலியர் அதிவேக சாலை
4-லேன் காரக்பூர்- மோர்கிராம் அதிவேக சாலை
6-லேன் தரத்- தீசா- மெஹ்சானா- அகமதாபாத் அதிவேக சாலை
4-லேன் அயோத்தி ரிங் ரோடு
4 லேன் ராய்ப்பூர்- ராஞ்சி அதிவேக சாலையில் பதல்கான் மற்றும் கும்லா இடையான பகுதி
6-லேன் கான்பூர் ரிங் ரோடு
4-லேன் வடக்கு கவுகாத்தி பைபாஸ் மற்றும் தற்போதுள்ள கவுகாத்தி பைபாஸை விரிவுபடுத்துதல்/ மேம்படுத்தும் திட்டம்
புனே அருகே 6-லேன் நாசிக் பாடா- கேட் அதிவேக சாலை
இந்த எட்டு அதிவேக சாலை கட்டுமான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 30+ டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இந்தத் திட்டங்கள் உதவும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications