பாபர் மசூதி அடியில் கோவில்.. கண்டறிந்த மூத்த தொல்பொருள் ஆய்வாளர் பிபி லால் மறைவு.. மோடி இரங்கல்
டெல்லி: பாபர் மசூதியில் அடியில் இந்து கோவில் தூண்கள் இருப்பதாக கண்டறிந்த இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பிபிலால் 101வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரலாக பணியாற்றிவர் பிராஜ்பாசி லால். இவர் பிபி லால் என அழைக்கப்படும் இவர் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் இயக்குனராக 1968 முதல் 1972 வரை பணியாற்றி வந்தார்.
இவரது காலத்தில் உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அருகே உள்ள இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதுதான் கோவில்களில் இருக்கும் தூண்கள் போன்ற அமைப்புகள் பூமிக்கடியில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ராமர்கோவில் கட்டும் பணி
அதன்பிறகு இதுதொடர்பாக பல்வேறு தகவல்களை ஒவ்வொருவரும் கூறிய நிலையில் பாபர் மசூதி விவகாரம் அரசியலானது. 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அகழாய்வுகள் நடத்தப்பட்டன. பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இந்து - முஸ்லிம்கள் இடையேயான அயோத்தி வழக்கில் 2019 நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

101 வயதில் மறைவு
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரலான 101 வயது நிரம்பிய பிபி லால் நேற்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் லோதியில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் மூத்த தொல்லியல் துறை நிபுணர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்கு அஞ்சலி செலுத்தினர்.

பத்மவிபூஷன் விருது
மரணமடைந்துள்ள பிபிலால் இந்தியாவின் மூத்த தொல்பொருள் ஆய்வாளராக இருந்த நிலையில் பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டு இருந்தது. இதுபற்றி இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பி ஆர் மணி கூறுகயைில், ‛‛ நேற்று காலை 8.30 மணிக்கு பிபி லால் மறைந்தார். டெல்லி ஹவுஸ்காஸில் உள்ள வீட்டில் அவர் மறைந்தார். இவர் ஒரு சிறந்த ஆசிரியர். நான்கு தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். இவர் தலைமையில் பாபர் மசூதிக்கு அருகே ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது 1970ம் ஆண்டில் மத்திய பகுதியில் நடந்தது. இருப்பினும் ஆய்வு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை'' என்றார்.

பிரதமர் மோடி இரங்கல்
இந்நிலையில் தான் பிபி லால் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிபி லாலுடன் இருக்கும் படத்தை ட்வீட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‛‛பிபி லால் ஒரு சிறந்த ஆளுமை. கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. நமது வளமான கடந்த காலத்தின் உடனான தொடர்பை ஆழமாக்கி அறிவாளியாக அவர் நினைவுக்கூறப்படுவார். பிபிலாலின் மறைவு வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி'' என கூறியுள்ளார்.
இதேபோல் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷான் ரெட்டியும் ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications