பிரதமரை தாக்க சென்றோமா.. பாஜகவுக்கு கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லை.. கொந்தளித்த காங்கிரஸ் எம்பி சுதா!
டெல்லி: பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க சென்றோம் என்று சொல்ல பாஜகவுக்கு கொஞ்சம் கூட அசிங்கமாக இல்லையா என்று காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி எழுப்பியுள்ளார். சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசுவதற்கு பயந்து கொண்டு பாஜக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதாக கூறிய சுதா, பெண்கள் மீது பழி போடுவது பாஜகவுக்கு புதிதல்ல என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் ராகுல் காந்தி பேசுகையில், முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் இருந்து சீனா ஆக்கிரமிப்பு தகவல்களை பேசி இருந்தார்.

ராகுலை தடுத்த அமித்ஷா
ராகுல் காந்தி பேசுவதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரையே சொல்ல சபாநாயகர் ஓம் பிர்லா தடுத்தார். இதனால் டென்ஷனான ராகுல் காந்தி, நான் என்ன பேச வேண்டும் என்று நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று கூறினார்.
லோக்சபாவுக்கு வராத பிரதமர்
ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்ததால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்பின் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அவைக்கே வரவில்லை. இதனால் பிரதமர் பேசாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
ஓம் பிர்லா பகீர்
இப்படி நடப்பது இந்திய வரலாற்றில் முதல்முறையாகும். இந்த நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜைக்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் பிரதமர் மோடியை தாக்க சதித் திட்டம் தீட்டினர். எனவே நான்தான் அவைக்கு வர வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன் என்று குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் விளக்கம்
குறிப்பாக தமிழக காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் மீது ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடிக்கு அவைக்கு வர துணிச்சல் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று லோக்சபாவில் நடந்தது என்ன என்பது குறித்து காங்கிரஸ் எம்பி சுதா விளக்கம் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி சுதா பேட்டி
அதில் காங்கிரஸ் எம்பி சுதா பேசுகையில், இது முற்றிலும் தவறானது. பெண் எம்பிக்கள் மீது அப்பட்டமாக பழி போடுகிறார்கள். நாங்கள் பிரதமர் மோடி மதிக்கிறோம். இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்து கபளிகரம் செய்திருக்கிறது. முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை முன் வைத்து ராகுல் காந்தி பேச அனுமதி கோரினார். ஆனால் ராகுல் காந்தி பேச அனுமதி அளிக்கக் கூடாது என்று பாஜகவினர் தடுத்தனர்.
பாஜகவின் நாடகம்
ராகுல் காந்தி பேச முயற்சிக்கும் போது சபாநாயகர் அனுமதிக்கவில்லை. மைக்கை கூட ஆஃப் செய்துவிட்டார்கள். கேமராவை வேறு பக்கம் மாற்றிவிடுகிறார்கள். இதனால் அகிம்சை வழியில் எதிர்க்கட்சிகள் போராடினோம். நாடாளுமன்றம் எங்களுக்கு கோயில் போன்றது. பாஜக எம்பி திஷிகாந்த் துபே இந்திய முன்னாள் பிரதமர்களான நேரு மற்றும் இந்திரா காந்தியை அசிங்கமாக, கொச்சையாக பேசினார்கள்.
பாஜகவுக்கு புதிதல்ல
இதனை சபாநாயகர் அனுமதிக்கிறார். நாங்கள் எவ்வளவு போராடியும் அவர்களின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க பயந்து கொண்டு, பொய்யான தகவலை கொண்டு பெண் எம்பிக்கள் மீது பழிபோடுகிறார்கள். சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொண்டு பெண் எம்பிக்களை அவமதிக்கிறார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு பொய் பேசுவது புதிதல்ல. அது அவர்களுக்கு கைவந்த கலை.
பாஜகவுக்கு அசிங்கமாக இல்லையா?
பிரதமரை தாக்க பெண் எம்பிக்கள் சென்றோம் என்று சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா? அவர்கள் மீது இப்படியொரு பழிபோடுகிறோமே.. மக்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க மாட்டார்களா.. எஃப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினோம். அதனையும் மறைக்க பழிபோடுகிறார்கள். டெல்லியில் இருந்து கடந்த 15 நாட்களில் 800க்கும் மேற்பட்ட பெண்கள், 15க்கும் மேலான ஆண்கள் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications