சபாஷ்! உத்தரகாண்ட் சிறுவர்களின் ‘குதிரை நூலகம்’- ஹைதராபாத் 7-ம் வகுப்பு சிறுமியின் 7 நூலகங்கள்!
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுவர்கள் நடத்தும் குதிரை நூலகம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 7-ம் வகுப்பு சிறுமி நடத்தும் 7 நூலகங்கள் குறித்து விவரித்த பிரதமர் மோடி பாராட்டும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று அதிசய நூலகங்கள் குறித்து பேசியதாவது: நம்முடைய தேசத்திலே கல்வி என்பது ஒரு சேவையாகவே பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட உணர்வோடு குழந்தைகளுக்குக் கல்விச் சேவையாற்றும் உத்தராக்கண்டின் சில இளைஞர்களைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது.

குதிரை நூலகம்: நைநிதால் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், சிறுவர்களுக்காக ஒரு வித்தியாசமான குதிரை நூலகத்தைத் தொடக்கியிருக்கின்றார்கள். இந்த நூலகத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், செல்ல மிகக் கடினமான இடங்களுக்கும் கூட, இதன் வாயிலாக குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, இந்தச் சேவை இலவசமானதும் கூட. இதுவரை இதன் வாயிலாக நைநிதாலைச் சேர்ந்த 12 கிராமங்கள் இதில் அடக்கம்.
நூல்கள் வாசிப்பு: சிறுவர்களின் கல்வியோடு தொடர்புடைய இந்த நேரிய பணியின் உதவிக்காக, வட்டாரத்து மக்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். இந்தக் குதிரை நூலகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் முயற்சி என்னவென்றால், தொலைவான கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கூடத்தின் புத்தகங்களைத் தவிர, கவிதைகள், கதைகள் மற்றும் அறநெறிக் கல்வி தொடர்பான புத்தகங்களும் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த வித்தியாசமான நூலகம், சிறுவர்களின் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் சிறுமியின் 7 நூலகங்கள்: நண்பர்களே, ஹைதராபாதிலே நூலகத்தோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி பற்றியும் தெரிய வந்தது. இங்கே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியான ஆகர்ஷணா சதீஷ் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறாள். வெறும் 11 வயதே நிரம்பிய இந்தச் சிறுமி, குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு அல்ல, ஏழு நூலகங்களை நடத்தி வருகிறார்.
7 நூலகத்தின் பின்னனி என்ன?: தன்னுடைய பெற்றோருடன் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்ற போது, ஆகர்ஷணாவுக்கு ஈராண்டுகள் முன்பாக உத்வேகம் பிறந்தது. இவருடைய தந்தை நலிந்தோருக்கு உதவும் வகையில் அங்கே சென்றார். சிறுவர்கள் அங்கே அவரிடத்திலே வண்ணம் தீட்டும் புத்தகங்களைக் கோரினார்கள், இந்த விஷயமானது, இந்த இனிமையான சிறுமியின் மனதைத் தொட்டு விட்டது, பல்வேறு வகையான புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தாள். தனது அண்டை அயல்புறங்களில் இருக்கும் வீடுகள், உறவினர்கள், நண்பர்களின் புத்தகங்களைத் திரட்டத் தொடங்கினாள், அதே புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதல் நூலகத்தைத் துவக்கினாள் என்ற செய்தி உங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கலாம்.

உத்வேகம் தரும் முயற்சி: நலிந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு இடங்களில் இந்தச் சிறுமி இதுவரை ஏழு நூலகங்களைத் திறந்திருக்கிறாள், இவற்றில் இப்போது சுமார் 6000 புத்தகங்கள் இருக்கின்றன. சிறுமியான ஆகர்ஷணா எப்படி குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்தெடுக்க பெரிய பணியாற்றுகிறாளோ, இது அனைவருக்கும் உத்வேகம் அளிக்க வல்லதாக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications