யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட.. ஒடிசா, மே.வங்கம், ஜார்கண்டுக்கு ரூ.1,000 கோடி நிதி.. மோடி உத்தரவு!
டெல்லி: யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்து ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் கரையை கடந்தது.
அந்த மாநிலத்தின் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே யாஸ் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் பேய் சூறாவளி காற்று வீசியது.

யாஸ் புயல் ருத்ரதாண்டவம்
ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்திய யாஸ் புயல், மேற்கு வங்க மாநிலத்திலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்திலும் யாஸ் புயலால் பாதிப்பு உண்டானது. ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வீடுகள் சேதம்
மேற்கு வங்கத்தில் தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், திகா, கிழக்கு மெதினிபூர் மற்றும் நந்திகிராம் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இந்த புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் பார்வையிட்டார்
இதற்கிடையே ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் நவீன் பட்நாயக்குடன் அவர் ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு சேத விவரங்களை அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கையாக வழங்கினார்.

ரூ.1,000 கோடி நிதி
இந்த நிலையில் இந்த ஆய்வு பணிகளை முடித்த பிரதமர் மோடி யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உடனடி ரூ.1,000 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். யாஸ் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்ப்படட்டுள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் நிதி வழங்கும்
மத்திய அரசு குழுவினர் இந்த மாநிலங்களுக்கு சென்று சேத மதிப்பீட்டு விவரங்களை அறிவித்த பின்னர் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி யாஸ் புயலினால் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். இறந்தவரின் உறவினருக்கு ரூ .2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் நிவாரண தொகையும் வழங்க பிரதமர் உத்தரவிட்டார் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications