கும்மிடிப்பூண்டியை தாண்டினா திமுகவை தெரியாதா? மோடி பேச்சை பாருங்க! பாஜகவை ரவுண்டு கட்டிய திமுகவினர்
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்திருந்த 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை, எதிர்க்கட்சிகள் தோற்கடித்திருந்தன. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மோடி தனது உரையில், திமுகவின் பெயரை 10க்கும் மேற்பட்ட முறையும், காங்கிரஸை 59 முறையும் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டை தாண்டினால்.. திமுகவை பெரியதாக தெரியாது என்று பாஜகவினர் விமர்சித்து வந்த நிலையில், மோடி திமுகவை பலமுறை தனது உரையில் குறிப்பிட்டிருந்தது கவனம் பெற்றிருக்கிறது.

சம்பவம் செய்த திமுக
கடந்த 2023ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டது. அந்த மசோதாவுக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பரவலாக ஆதரவாக வாக்களித்திருந்தன. எனவே இரு அவைகளிலும் மசோதா வெற்றிப்பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், சட்டமாக அறிவிக்கப்படவில்லை.
மகளிர் இடஒதுக்கீடா? தொகுதி மறுவரையறையா?
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனில், தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும், இதற்கு 131-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்த மசோதாவின் நோக்கம் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது கிடையாது. மாறாக, தொகுதிமறுவரையறைதான் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரண்டு நின்று இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன. குறிப்பாக இந்த மசோதா மீது உரையாற்றிய ஆ.ராசா, கனமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இவர்களின் உரை, நாடாளுமன்றத்தில் மிகவும் கவனம் பெற்றிருந்தது. அதேபோல, காங்கிரஸும் தன் பங்குக்கு இறங்கி அடித்தது. இப்படியாக மசோதா தோல்வியடைந்தது.
மோடி உரை
இதனை தொடர்ந்து நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, எதிர்க்கட்சிகளால்தான் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று விமர்சித்திருந்தார். "எதிர்க்கட்சிகளால் மகளிர் முன்னேற்றம் முடக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான் மகளிரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் கவனமாக இருந்தன. இதற்காக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் எடுத்த நடவடிக்கையை, வெற்றியாக எப்படி கொண்டாடினார்கள் என்பதை நாடே பார்த்தது" என்று பேசியிருந்தார்.
திமுகவை உச்சரித்த மோடி
இந்த உரையில் திமுவின் பெயரை 10க்கும் மேற்பட்ட முறையும், காங்கிரஸ் பெயரை சுமார் 59 முறையும் மோடி குறிப்பிட்டிருந்தார். ஆனால், பெண்களைப் பற்றி மிகக் குறைந்த அளவே பேசியுள்ளார். இதன் மூலம் அவரது பேச்சின் நோக்கம் என்னவென்று தெரிந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுக மீது பாஜக முன்வைக்கும் மிகப்பெரிய விமர்சனம், கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவை யாருக்கும் தெரியாது என்பதுதான். ஆனால், அப்படி தெரியாமலா மோடி திமுகவின் பெயரை 10க்கும் அதிகமாக முறை குறிப்பிட்டிருக்கிறார்? என்று பாஜகவுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.














Click it and Unblock the Notifications