முகத்தில் சோகம்.. கண்ணில் கண்ணீர்.! சபர்மதி ரிப்போர்ட் படம் பார்க்கும் போது எமோஷ்னலான பிரதமர் மோடி
டெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக எம்பிக்களுக்கு திரையிடப்பட்டது. நாடாளுமன்ற வளாக நூலகத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்தில் இந்த படம் திரையிடப்பட்ட நிலையில், இதைப் பார்த்த போது பிரதமர் மோடி எமோஷனல் ஆனதாகக் கூறப்படுகிறது.
இப்போது உண்மையாக நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் ரிலீசாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தி சினிமாவான பாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் அதிகரித்துள்ளது.

அதன்படி இப்போது தி சபர்மதி ரிப்போர்ட் என்ற படம் இந்தியில் தயாராகி உள்ளது. இது குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
சபர்மதி ரிப்போர்ட்: திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாக நூலகத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற "தி சபர்மதி ரிப்போர்ட்" திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் என்டிஏ எம்பிக்களுடன் கலந்து கொண்டார். விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரிதி டோக்ரா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஷோபா கபூர், ஏக்தா ஆர் கபூர், அமுல் வி மோகன் மற்றும் அன்ஷுல் மோகன் இணைந்து தயாரித்துள்ளனர். தீரஜ் சர்னா என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் சிறப்புக் காட்சி பிரதமர் மோடிக்கு திரையிடப்பட்டது. நாடாளுமன்ற வளாக நூலகத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்தில் இந்த படம் நேற்று மாலை திரையிடப்பட்டது. இதைப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, ஜிதன் ராம் மாஞ்சி, அஷ்வினி வைஷ்ணவ் எனப் பல மத்திய அமைச்சர்களும் எம்பிக்களும் பார்த்துள்ளனர்.

கண்ணீர்: இந்தப் படத்தைப் பார்த்த போது பிரதமர் நரேந்திர மோடி சில இடங்களில் ரொம்பவே எமோஷ்னல் ஆனதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் கண்ணீரும் விட்டதாகக் கூறப்படுகிறது. படத்தைப் பார்த்த பிறகும் இதைப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சபர்மதி ரிப்போர்ட் படத்தை நான் எனது சகா பாஜக கூட்டணி எம்பிக்களுடன் பார்த்தேன். இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர்களை நான் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சிறப்பு திரையிடலின் போது படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி, ரித்தி டோக்ரா, இயக்குநர் தீரஜ் சர்னா உள்ளிட்டோரும் அங்கு இருந்தனர். பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர் பொறுப்பில் உள்ளவர்களுடன் தனது படத்தைப் பார்த்தது தனது கேரியரின் உச்சம் என்று, நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத்: இந்த சிறப்பு திரையிடலில் பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தும் படத்தைப் பார்த்தார். படத்தைப் பார்த்த பிறகு அவர் கூறுகையில், "இது மிக முக்கியமான படம்... இது நமது நாட்டின் வரலாற்றைப் பதிவு செய்கிறது. முந்தைய அரசு மக்களிடம் இருந்து மறைத்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு மோசமான சூழலை வைத்து அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் எப்படி அரசியல் செய்தார்கள் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications