"இந்துக்களுக்கு தனி பட்ஜெட்.. முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட்?" மோடியின் பேச்சுக்கு ப சிதம்பரம் பதில்
டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பட்ஜெட், இந்து பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்களை கொண்டு வந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி சாடியிருந்த நிலையில், அதற்கு காங்கிரஸின் ப. சிதம்பரம் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று புதன்கிழமை பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு தனி பட்ஜெட்டைக் கொண்டுவரும் என்று கூறியது பேசுபொருள் ஆனது.

தான் குஜராத் முதல்வராக இருந்த போதே காங்கிரஸ் இந்தத் திட்டத்தை கொண்டு வர முயன்றதாகவும் இருப்பினும், அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதை காங்கிரஸ் கைவிட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பதில்: பிரதமர் மோடி கற்பனையான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் 15 சதவீத தொகையை முஸ்லீம்களுக்கு மட்டுமே செலவிட மன்மோகன் சிங் திட்டம் தீட்டியதாக மோடி கூறுவது முற்றிலும் தவறானது என்றும் பிரதமரின் உரையை எழுதுவோர் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
ப சிதம்பரம்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமரின் அறிக்கைகள் மேலும் மேலும் வினோதமானதாக மாறி வருகிறது. அவரது உரை எழுதுபவர்கள் தங்கள் சமநிலையை இழந்துவிட்டதையே இது காட்டுகிறது. நேற்றுதான் இந்து-முஸ்லிம் பிரிவினை பற்றி பேசினால் பொது வாழ்வில் இருக்கவே தகுதியற்றவன் என்று கூறியிருந்தார். ஆனால், இன்று வழக்கம் போல இந்துக்கள் முஸ்லிம்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை முஸ்லீம்களுக்கு மட்டுமே செலவிட டாக்டர் மன்மோகன் சிங் திட்டமிட்டிருந்தார் என்ற பிரதமரின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட், இந்துக்களுக்கு தனி பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளதாக அவர் கூறிய குற்றச்சாட்டு மிகவும் மோசமானது. அது முற்றிலும் கற்பனையானது என்றே சொல்ல முடியும்.
எப்படி முடியும்: இந்திய அரசியலமைப்பின் 112வது பிரிவு நாட்டிற்கு ஒரே ஒரு வருடாந்திர பட்ஜெட் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. அதுதான் யூனியன் பட்ஜெட். அப்படி இருக்கும் போது நாட்டிற்கு இரண்டு பட்ஜெட்டுகள் எப்படி இருக்க முடியும்?
தேர்தல் பிரச்சாரத்தின் எஞ்சிய நாட்களில், பிரதமர் மோடி இதுபோல பேசுவதை கைவிடுவார் என்று நம்புகிறேன்.. பிரதமரின் பேச்சுக்களை இந்திய மக்கள் மட்டுமின்றி.. உலகமே உற்றுப் பார்த்து வருகிறது. அவை இப்போது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
பின்னணி என்ன: நேற்று புதன்கிழமை மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, "மத்திய அரசு பட்ஜெட்டில் 15 சதவிககித்தை சிறுபான்மையினருக்காக ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது. நான் (குஜராத்) முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் இந்த திட்டத்தை கொண்டு வர முயன்றது.. பாஜக இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தது.. எனவே தான் அதை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறது.
காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் மத அடிப்படையில் இரண்டு பட்ஜெட்டுகளை உருவாக்கிவிடுவார்கள். ஆனால், நான் பட்ஜெட்டை இந்து பட்ஜெட் மற்றும் முஸ்லீம் பட்ஜெட் என்று பிரிக்க அனுமதிக்க மாட்டேன்.. மத அடிப்படையில் இடஒதுக்கீட்டையும் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்" என்று அவர் பேசியிருந்தார். அதை சுற்றியே இப்போது விவாதம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications