உறுதி மற்றும் கண்ணியத்துடனும் செயல்பட்டீர்கள்!... ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி : குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்த காலத்தில் அதிகபட்ச நேர்மை, செயல்திறன், கொள்கைகள் மற்றும் சேவைகளை பின்பற்றி சிறப்பாக பணியாற்றியதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அண்மையில் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்றுக்கொண்டார். முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கப்பட்ட பிரிவுபசார விழாவில், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று அவரை கவுரவித்தனர்.

இதனிடையே, ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதற்கு முந்தைய நாள், தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது : தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணியிலும் உறுதியுடனும், கண்ணியத்துடனும் செயல்பட்டு உள்ளீர்கள். ஒருமைபாட்டிற்கு அர்ப்பணிப்பும், நம் அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு மரியாதையும் அளித்து உள்ளீர்கள். குடியரசுத் தலைவராக பதவி வகித்த காலத்தில், தங்களின் செயல்பாடுகள், பேச்சுகள் அனைத்திலும் நம் நாட்டின் சிறப்புகளை உலகம் முழுதும் எடுத்து சென்றீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் நேரத்தையும், ஆலோசனைகளையும் எனக்கு தாராளமாக அளித்தீர்கள். இனியும் உங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து பெறுவேன். குடியரசுத் தலைவரான தங்களுடன், உங்கள் பிரதமராக பணியாற்றியதில் பெருமைப்படுகிறேன். எப்போதும் கடைக்கோடி குடிமகனின் நலன் குறித்து மட்டுமே சிந்தித்தவர் நீங்கள்; மக்களோடு மக்களாக இருந்தவர். அவர்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகளை நன்கு அறிந்தவர். இந்த மண்ணுடனும், மக்களுடனும் ஒன்று கலந்து இருப்பதையே பெருமையாக கருதினீர்கள்.
சமூக மாற்றத்திற்காகவும், ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, விளம்புநிலை மக்கள் மற்றும் பெண்களுக்காகவும் நீங்கள் குரல் கொடுக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. அரசியல்வாதியாகவும் உங்கள் பணி குறிப்பிடத்தகுந்தது. பா.ஜ.க தொண்டராக மக்களோடு மக்களாக உழைத்துள்ளீர்கள். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளீர்கள். அதன் பின், பீஹார் ஆளுநராக உயர்ந்து, பின் நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உயரிய பதவியை அடைந்தீர்கள்.
சில வாரங்களுக்கு முன், உங்களுடன் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்களின் சொந்த கிராமமான பரவுன்க் வந்தது மறக்க முடியாதது. ஏழை எளிய மக்களுக்காக உங்க குடும்ப வீட்டை நீங்கள் தானமாக அளித்திருப்பது கண்டு நெகிழ்ந்து போனேன். தங்கள் மீது கிராமத்து மக்கள் பொழிந்த அன்பும், உங்கள் வேர்களோடு நீங்கள் இணைந்திருப்பதையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
'வெற்றி பெற்ற மனிதராக நீங்கள் உருவாக காரணமாக இருந்த இந்த சமூகத்திற்கு நீங்கள் பெற்றதை திருப்பி அளிக்க தவறக்கூடாது' என, அண்மையில் மாணவர்களிடையே உரையாற்றினீர்கள். அதையே உங்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கிறது என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications