‛தற்கொலை கடிதம்’.. பிரதமர் மோடி சொன்ன ஜோக்! ராகுல்-பிரியங்காவுக்கு வந்ததே கோபம்!கடும் எதிர்ப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‛தற்கொலை கடிதம்' என்பதன் அடிப்படையில் சொன்ன ஜோக் தற்போது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. பிரதமர் மோடி சொன்ன ஜோக் மற்றும் அதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் சிரிக்கும் வீடியோ வெளியான நிலையி்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் கோபமடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசு விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. சில வேளைகளில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். இந்நிலையில் தான்நேற்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அந்த தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர் இந்தி மொழியில் நன்றாக பேசுகிறார் என்பதையும், அவர் எப்படி மேம்படுத்தினார் என்பது பற்றியும் பிரதமர் மோடி சில விஷயங்களை குறிப்பிட்டார். அப்போது பிரதமர் மோடி ஜோக் ஒன்றை கதையாக கூறினார். இதை கேட்ட பலரும் சிரித்தனர். பிரதமர் மோடியும் சிரித்தார்.
இதுதான் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ஒரு ஜோக் ஒன்று வழக்கத்தில் உள்ளது. அதை உங்களிடம் பகிர்கிறேன். வாழ்க்கை விரக்தியாக உள்ளது. மனசோர்வால் வாழ முடியவில்லை காங்காரியா ஏரியில் குதிக்க போகிறேன் என பேராசிரியரின் மகள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்ய செல்கிறார். இந்த கடிதத்தை படித்த பேராசிரியர் ‛‛நான் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். பலமுறை அவளுக்கு அறிவுரை கூறியும் காங்காரியா ஏரியின் பெயரை தவறாக எழுதியிருக்கிறார்'' என கூறியதாக தெரிவித்தார்.
அதாவது பேராசிரியர் மகள் தற்கொலை செய்வதாக எழுதியது பற்றி கவலைப்படாமல், காங்காரியா ஏரியின் பெயரை தவறாக எழுதியதை சுட்டிக்காட்டியதாக கூறினார். இதை கேட்ட அனைவரும் சிரித்தனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில், ‛‛'தற்கொலை குறித்து பிரதமர் ஜோக் சொல்கிறார். தற்கொலை விஷயத்தில் எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவராக இருக்க முடியும்?. தற்கொலையால் பல குடும்பங்கள் குழந்தைகளை இழந்துள்ளன. பிரதமர் இதை நகைப்புக்குரியதாக பேசக்கூடாது'' என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரியங்கா காந்தி, ‛‛இளைஞர்களின் மனச்சோர்வு, தற்கொலை என்பது சிரிப்பதற்கான விஷயம் அல்ல. என்சிஆர்பி-ன் புள்ளிவிபரப்படி 2021ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம். இது ஒரு பேரிடர். மாறாக இது ஜோக் அல்ல. பிரதமரும், அவர் கூறியதை கேட்டு சிரித்தவர்களும் தற்கொலை தொடர்பான மனநலப் பிரச்சினைகளை கேலி செய்வதை விட அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என சாடியுள்ளார். இதேபோல் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications