வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதும் திரும்ப பெறப்பட்டதும் ஏன்?.. பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்
டெல்லி: வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது ஏன் என்பது குறித்தும் அவை திரும்ப பெறப்பட்டது ஏன் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு விவசாயிகள் டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இந்த 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மையை தரும். ஆனால் அவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை என கூறியிருந்தார்.

அரசு பணி
உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், அரசு பணியும் வழங்க வேண்டும் என விவசாய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எத்தனை விவசாயிகள் இறந்தனர் என்பது குறித்து தங்களிடம் டேட்டா இல்லை என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து பெரும் விவாதமே நடந்தது.

விவசாயிகளின் நலனுக்கானது
இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் வேளாண் சட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறுகையில் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்.

வருங்கால நிகழ்வுகள்
ஆனால் அப்படி நன்மையை கொடுக்கும் இந்த சட்டத்தை நான் திரும்ப பெற்றதற்கு காரணம் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டதுதான். இதற்கு மேல் இதுகுறித்து விளக்கமளிக்க தேவையில்லை என நினைக்கிறேன். இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது என்பதை வருங்கால நிகழ்வுகள் தெளிவுப்படுத்தும்.

தலையாய கடமை
விவசாயிகளின் மனதை கவர முயற்சித்தேன். ஏழை எளிய விவசாயிகளின் வலியை என்னால் உணர முடிகிறது. எப்போது அவர்களின் மனதை கவர முயற்சிப்பேன். ஜனநாயக நாட்டில் மக்களுடன் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவது முதன்மை கடமையாகும். இது போன்ற ஆலோசனைகளை நடத்துவதை எங்கள் அரசு எப்போதும் விரும்பும் என்றார்.












Click it and Unblock the Notifications