“ஒரே பாரதம் உன்னத பாரதம்”.. அன்றே செயல்படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மக்கள் - பிரதமர் மோடி பேச்சு!
டெல்லி : சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஒரே பாரதம் உன்னத பாரதம்" எனும் சிந்தனையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழ்நாட்டு மக்கள், சௌராஷ்டிர மக்களை வரவேற்று செயல்படுத்தினர் எனத் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சௌராஷ்டிரா மக்கள் பரவலாக வாழ்கின்றனர். குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார தொடர்பை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநிலம் சோம்நாத்தில், 'சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த முறை 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. அதேபோல் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் சோம்நாத் கோயில், துவாரகா, ராஜ்கோட், ஒற்றுமை சிலை அமைந்துள்ள ஏக்தா நகர் ஆகிய பகுதியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் : சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த 14ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கொடியை தொடங்கிவைத்தார்.
இந்த சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 3,000 பேர் சிறப்பு ரயில் மூலம் குஜராத் சென்றுள்ளனர். சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை குஜராத் அரசு சௌராஷ்டிர மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமர் மோடி பேச்சு : கடந்த 17ஆம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சௌராஷ்டிரா தமிழ் சங்கம நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது. இதையொட்டி, நிறைவுநாள் நிகழ்ச்சியில், இன்று பிரதமர் மோடி காணொளிக்காட்சி காட்சி மூலம் உரையாற்றினார்.
சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது என்றும், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் வாழும் சிறப்பு வாய்ந்த நாடு என்றும் தெரிவித்தார்.

திருக்குறள் சொன்ன மோடி : மேலும், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட புதுமைகளை உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது என்று பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள், இந்தியாவின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க உத்வேகம் அளிக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், "ஒரே பாரதம் உன்னத பாரதம்" எனும் சிந்தனையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழ்நாட்டு மக்கள், சௌராஷ்டிர மக்களை வரவேற்று செயல்படுத்தினர் எனத் தெரிவித்ததோடு, விருந்தோம்பலை வலியுறுத்தும், 'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்' என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டிப் பேசினார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications