மகளிர் இடஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த திமுக.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி ஆக்ரோஷ ‘அட்டாக்
டெல்லி: ''மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருவிலேயே அழித்துவிட்டார்கள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக பெண்களுக்கான அதிகாரம் கிடைக்காமல் போய் உள்ளது'' என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறைக்கான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டன. இதையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவித்தார். அதன்படி 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நசுக்கப்பட்டு விட்டது. அனைத்து தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருவிலேயே அழித்துவிட்டார்கள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக பெண்களுக்கான அதிகாரம் கிடைக்காமல் போய் உள்ளது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக - காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. அவர்களுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை எதிர்காலத்தில் சந்திக்கும். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஒரே சாக்குப்போக்கையே கூறி வருகின்றன. ஏதோ ஒரு தொழில்நுட்ப சிக்கலை காரணம் காட்டி, அவர்கள் பெண்களின் உரிமைகளைப் பறித்துள்ளனர். அரசியலின் இந்த இழிவான போக்கை நாடே உணர்ந்துகொண்டுள்ளது. அதன் பின்னணி பற்றியும் நாடு புரிந்து வைத்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்த எதிர்க்கட்சிகளிடம் நான் ஒன்றை மிகத்தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். அவர்கள் பெண்களின் சக்தியைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள். 21ம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இவர்களின் உள்நோக்கங்களை அந்த பெண்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். எல்லா உண்மையும் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் பாவம் இழைத்துள்ளனர். இந்த பாவத்துக்கு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.














Click it and Unblock the Notifications