அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!
டெல்லி: போர் சூழல் காரணமாக, இந்தியா எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனையில், பெட்ரோல், டீசல் இருப்பு எவ்வளவு? அதன் விநியோகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கலந்துரையாடுகிறார். ஏற்கெனவே வட மாநிலங்களில் எரிபொருள் இருப்பு தொடர்பான வதந்தி காரணமாக, பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் மோதலின் தாக்கம் பரவலாக எதிரொலித்திருக்கிறது. இந்நிலையில் மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நிலைகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை காணொலிக் காட்சி மூலம் உரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடல், 'டீம் இந்தியா' அணுகுமுறையின் கீழ் ஒருங்கிணைப்பை வலியுறுத்தும். இதற்கு முன்னதாக, மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து தேசிய தலைநகரில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அரசு தரப்பில் பங்கெடுத்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உடனிருந்தனர்.
கூட்டத்திற்குப் பின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ஆசியாவில் நிலவும் உலகளாவிய பதட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஒரு பரந்த புரிதலை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"அரசு எதிர்க்கட்சிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தது. இறுதியாக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த நெருக்கடியான நேரத்தில், அரசு எடுக்கும் எந்த முடிவுகளுக்கும், நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஒருமித்து ஆதரவளிப்பார்கள் என்று கூறி உள்ளனர். எத்தகைய தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிய அனைத்தும், அரசு இன்று போதுமான தகவல்களை அளித்துள்ளது என்று நான் நம்புகிறேன்" என ரிஜிஜு தெரிவித்தார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அந்த மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.












Click it and Unblock the Notifications