PM Modi: இஸ்ரேலுக்கு 2-வது முறையாக பயணம்.. 7 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் பிரதமர் மோடி.. பிளான் இதுதான்!
டெல்லி: பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு நாளை (25 ஆம் தேதி) சுற்றுப்பயணம் செல்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில், 7 ஆண்டுகள் கழித்து புதன்கிழமை செல்கிறார். ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடி செல்லும் பயணம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இஸ்ரேல் - காசா இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குவதும் என மத்திய கிழக்கில் ஒரே பதற்றமான சூழல் பல ஆண்டுகளாக நிலவியது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைதி ஒப்பந்தம்
இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் பிடித்து சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக்கூறி காசா மீது போர் தொடுத்தது.
கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் அமெரிக்காவில் அதிபராக பதவியேற்ற டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தையை தொடங்கினார். இதன் விளைவாக எகிப்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சந்திப்பில் இருதரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடி இஸ்ரேல் சுற்றுப்பயணம்
இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழலில் பிரதமர் மோடி நாளை பிப்ரவரி 25 அன்று இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளார். இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
மோடியின் முந்தைய இஸ்ரேல் வருகை
பிரதமர் மோடியின் முதல் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணம் சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறையாக அமைந்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது மேற்குக் கரைக்கு பிரதமர் மோடி செல்லவில்லை. பின்னர் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். கடந்த பிப்ரவரி 2018-ல் ரமல்லாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. மோடியின் முந்தைய பயணங்கள் இதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி மீண்டும் இஸ்ரேல் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்
மத்திய கிழக்கில் நிலவும் சிக்கலான சூழலில் மோடியின் பயணம், இந்தியாவின் நிலைப்பாடு சமநிலையுடன் இருப்பதை காட்டுவதாக அமைகின்றது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த சுற்றுப்பயணம் உதவும் என்றும் பார்க்கப்படுகிறது. முன்னதாக அக்டோபர் 7 தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒருமைப்பாட்டுடன் இஸ்ரேலுக்கு உடனடி ஆதரவு தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளாக, அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை குறித்து கவலை தெரிவித்த இந்தியா, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பக் கோரியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா ஆதரித்தது. ஆயினும், அவர் தலைமையிலான "அமைதிக் குழுமத்தில்" (Board of Peace) இணைய மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications