பிரதமர் மோடி இன்று அணிந்து வந்த ‘ஜாக்கெட்’ கரூரில் தயாரானதாம்.. அப்படி என்ன ஸ்பெஷல்? அட.. சூப்பர்ல!
மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஓவர் கோட்டை பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்தார்.
டெல்லி : இன்று நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அணிந்து வந்த உடை விசேஷமாக தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி இன்று தனது சட்டைக்கு மேலே அணிந்திருந்த நீல நிற ஜாக்கெட் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.
தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஓவர் கோட்டை அணிந்து இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
இந்த சிறப்பு உடையை அணிந்து கொண்டு, பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இறுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து உரையாற்றினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று பிரதமர் பதில் உரை ஆற்றுகிறார்.

மோடி அணிந்திருந்த ஜாக்கெட்
இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, நீல நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். பிரதமர் மோடி பெரும்பாலும், ஓவர் கோட் அணிந்து வருபவர் தான் என்றாலும், இன்று அணிந்திருந்த இந்த கோட் சற்று விசேஷமானது. பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட நீல நிற ஓவர் கோட்டை இன்று அணிந்திருந்தார்.

மறுசுழற்சி
சமீபத்தில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் இந்த கோட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆடை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியின் கோட்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஆடைகளை தயாரிக்க 10 கோடிக்கும் அதிகமான தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் பிரதமர் மோடிக்கு கோட் தயாரிக்கப்பட்டது. இந்த உடையை அணிந்து இன்று நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றார்.

சூழலியல் திட்டங்கள்
சமீபத்தில், மத்திய அரசு தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை ரூ.19,700 கோடி செலவில் தொடங்கியுள்ளது. கார்பன் பயன்பாட்டை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாற்று எரிசக்தி இலக்கை அடைய ரூ.35,000 கோடி ஒதுக்கினார். மேலும் அரசின் ஏழு முன்னுரிமைகளில் பசுமை வளர்ச்சியையும் பட்டியலிட்டார். இந்நிலையில், பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஆதரிக்கும் வகையில் கோட் அணிந்து வந்துள்ளார் பிரதமர் மோடி.

கரூர் நிறுவனம்
பிரதமர் மோடி இன்று அணிந்திருந்த இந்த ஜாக்கெட்டை தமிழ்நாட்டின் கரூரில் உள்ள ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஃபைபராக தயாரித்து, அதனை துணியாக மாற்றி 9 வண்ணத்தில் துணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம். அதன் பிறகு, குறிப்பிட்ட நிறம் பிரதமர் மோடிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, குஜராத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் டெய்லருக்கு, அந்த துணி அனுப்பப்பட்டு, அவர் இந்த ஜாக்கெட்டை தயார் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications