பிரதமர் மோடி 3.0இன் முதல் அமைச்சரவை கூட்டம்.. எடுக்கப்பட்ட மிக முக்கிய முடிவு என்ன! வெளியான தகவல்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நேற்று பிரதமராகப் பதவியேற்றார்.

அவருடன் மற்ற அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் பிரதமருடன் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரவை கூட்டம்: இதற்கிடையே என்டிஏ கூட்டணி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகே எந்த அமைச்சருக்கு எந்த இலாகா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இது தவிர மேலும் சில முக்கிய விஷயங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக PMAY அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2015-16 முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. இந்த PMAY திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
முடிவு: PMAY திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மற்ற கழிப்பறைகள், எல்பிஜி இணைப்பு, மின்சார இணைப்பு, தண்ணீர் குழாய் இணைப்பு ஆகியவையும் மத்திய மாநில அரசுகளின் இணைந்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி அரசு முன்னெடுக்கும் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று.. இது தொடர்பான முக்கிய முடிவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு சுமார் ₹ 20,000 கோடியை வழங்குவதற்கான ஆணையில் இன்று காலை பிரதமர் மோடி கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications