இந்து முஸ்லிம் என பிரித்து பேசுவதே இல்லை.. எதிர்க்கட்சிகளின் மதவாதத்தை அம்பலப்படுத்துகிறேன்: மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்து முஸ்லிம் என தாம் ஒரு போதும் பிரித்துப் பேசுவதே இல்லை; எதிர்க்கட்சிகளின் மதவாதப் போக்கைத்தான் அம்பலப்படுத்துகிறேன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பொது மக்களின் தங்கம், சொத்துக்களை பறித்து, அதிக குழந்தைகள் உடையவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது; முஸ்லிம்களுக்குதான் முதல் உரிமை என்கிறது காங்கிரஸ். நம் ஏழைப் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடிகளுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம், பணம் அனைத்தையும் ஆராய கணக்கெடுப்பு நடத்துவோம் என்கிறது காங்கிரஸ். நீங்கள் சம்பாதித்த பணத்தை, சொத்துக்களை அரசாங்கம் பறிப்பதை பொறுத்துக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.

PM Narendra Modi explains never done Hindu-Muslim politics

மேலும் நாட்டின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தாரே.. அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றவர்களுக்கும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் உங்கள் சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்படும் என காங்கிரஸ் சொல்வதை ஏற்பீர்களா? எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி இருந்தார்.

பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களிலும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பிரதமரே பேசுவதை எப்படி ஏற்க முடியும்? எனவும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி இது பற்றி கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் இந்து- முஸ்லிம் என பிரிவினைப்படுத்தி பேசுவதே இல்லை. என்னுடைய பேச்சுகளுக்கு அப்படி ஒரு மதச்சாயத்தை எதிர்க்கட்சிகள்தான் பூசுகின்றன.

இந்து- முஸ்லிம் என எப்போதும் பேசியதும் இல்லை. இனி எப்போதும் பேசவும் மாட்டேன். முத்தலாக் தவறு என்பதால் நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன். எதிர்க்கட்சிகள்தான் மதவாத போக்குடன் செயல்படுகின்றன. இதனைத்தான் நான் பொதுக் கூட்டங்களில் அம்பலப்படுத்தி வருகிறேன். எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டி பேசினேன். ஒப்பந்தங்களை சிறுபான்மையினருக்கு கொடுப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிப் பேசினால் சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசுவதாக, முஸ்லிம்களைத் தாக்கிப் பேசுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைப்பவை எதிர்க்கட்சிகள்தான். அந்த எதிர்க்கட்சிகள்தான் இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கின்றன. மதம் சார்ந்து ஒருதரப்புக்கு ஆதரவான போக்குடன் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. இவற்றைத்தான் பிரசாரங்களில் சுட்டிக்காட்டி விமர்சிக்கிறேன். இப்படியான அணுகுமுறை இந்திய அரசியல் சாசனத்தை அழித்துவிடும் என எச்சரிக்கிறேன். மத்தியில் ஆளும் எங்களது அரசாங்கம் மதம், ஜாதி அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவும் இல்லை. நாங்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையைத்தான் விமர்சிக்கிறோம். 75 ஆண்டுகளாக முஸ்லிம்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்றுதான் சொல்லுகிறோம். வாக்குகளுக்காக எதனை வேண்டுமானாலும் செய்வீர்களா? நாட்டுக்காக எதனையும் சிந்திக்க மாட்டார்களா? அதிகாரத்துக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் நாட்டுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+