அசத்திபுட்டாரே மோடி! "செங்கோல்" மட்டுமில்ல.. தமிழுக்கு கிடைத்த அதிக முக்கியத்துவம்! வேறு என்ன?
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து இருக்கும் நிகழ்வில் செங்கோலையும் கடந்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்ன முக்கியத்துவம்.. விரிவாக பார்ப்போம்.
டெல்லியில் உள்ள இந்தியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் அருகே முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 3 ஆண்டுகளாக இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தன.

இந்த நிலையில் சாவர்க்கர் பிறந்தநாளான இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திறப்பு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவையே புறக்கணித்தன.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் முன் தோன்றி சோழர் காலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பயன்படுத்தப்படுவதைபோல், திருவாவடுதுறை ஆதீனம் 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போவதாக அறிவித்தார்.
அன்றிலிருந்தே செங்கோலை பற்றிய பேச்சுக்கள் எழத் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களை பெருமைப்படுத்துவதாக ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் முடியாட்சியை அங்கீகரிக்கும் வகையில் இது இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.
கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடத்தினரால் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. நேற்றைய தினம் ஆதீனங்களிடம் செங்கோலை வாங்கிய பிரதமர் நரேந்திர மோடி அதன் முன் நெடுஞ்சாண்கிடையாக மண்டியிட்டு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அதனை எடுத்துச் சென்று மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே வைத்தார்.
செங்கோல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பலர் தமிழுக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழில் தேவாரம், திருவாசகமும் ஓதப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்திடம் நாடாளுமன்ற திறப்பு விழாவில் தேவாரம், திருவாசகம் ஓதப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அப்போது ஆதீனம், அங்கு சென்றபிறகுதான் எல்லாம் தெரியும் என பதிலளித்தார். இந்த சூழலில் தேவாரமும் திருவாசகமும் ஓதப்பட்டு செங்கோலுடன் மட்டுமின்றி மத பூஜைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது விழாவில் பங்கேற்ற தமிழர்களை நெகிழ வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications