“கோல்” மாறிடுச்சு.. ஜி20 தலைமையை பிரேசிலிடம் வழங்கிய பிரதமர் மோடி! அடுத்த ஆண்டு புட்பால் தேசத்திலா?
டெல்லி: இந்தியாவில் ஜி20 மாநாடு நடந்துமுடிந்து இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
உலகளவில் பல்வேறு நாடுகள் இணைந்த பல கூட்டமைப்புகள் இயங்கி வருகின்றன. அவை அனைத்திலும் மிகவும் சக்தி வாய்ந்த கூட்டமைப்பாக இருப்பது ஜி20. இந்த கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, கனடா, பிரேசில், துருக்கி, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, சவூதி அரேபியா, துருக்கி, இந்தோனேஷியா, மெக்சிகோ, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் உள்ளன.

சர்வதேச ஜிடிபியில் 85 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் 3ல் 2 மடங்கு மக்கள் தொகையையும், 75% சர்வதேச வர்த்தகத்தையும் இந்த ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் வைத்து இருக்கின்றன. இந்த குழுவின் தலைமை பதவி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக்கு வழங்கப்படும். இதன் தலைமை பதவியை ஏற்கும் நாட்டில் அந்த ஆண்டு ஜி 20 மாநாடு நடத்தப்படும்.
அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியா தலைநகர் பாலியில் ஜி 20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ள நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.
அந்த கூட்டத்தின் முடிவில் இந்தோனேசியா அதிபர் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவுக்கு ஜி 20 நாடுகள் குழுவின் தலைமை பதவியை ஒப்படைத்தார். அன்றில் இருந்து மத்திய அரசு இதற்காக அனைத்து வகை ஏற்பாடுகளையும் பல மாதங்களாக செய்து வந்தது. ஜி20 தொடர்பான விளம்பரங்களை பல வகைகளில் செய்தது. அனைத்து ஏற்பாடுகள் முடிந்து நேற்று ஜி 20 மாநாடு டெல்லியில் தொடங்கியது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, பிரிட்டன் பிரமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலியா அதிபர் அந்தோனி அல்பனீஸ், சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ டா சில்வா, வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா, ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உள்ளார்கள்.

இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தை வழங்கினார். அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகள் பிரமுகர்கள், வெளிநாட்டு துாதவர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
#WATCH | G 20 in India | Prime Minister Narendra Modi hands over the gavel of G 20 presidency to the President of Brazil Luiz Inácio Lula da Silva. pic.twitter.com/ihEmXN9lty
— ANI (@ANI) September 10, 2023
நேற்று கூட்டத்தில் பருவ நிலை மாற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஆப்பிரிக்க ஒன்றியத்தை இந்த கூட்டமைப்பில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இன்று ஜி20 மாநாட்டின் தலைமை பதவியை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ டா சில்வாவிடம் பிரதமர் மோடி வழங்கினார். அத்துடன் ஜி20 தலைமை பதவிக்கான கோலையும் அவர் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications