பிரான்ஸ்,அமீரகம் டூர் ஓவர்.. இந்தியா திரும்பிய பிரதமர் மோடி! டெல்லி வந்தவுடன் செய்த முதல் வேலை இதான்
டெல்லி: பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பி இருக்கிறார்.
இந்திய விமானப் படைக்கு ரபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாகவும், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் டே என்ற தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் சென்ற நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

அப்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார். அந்த கூட்டத்தில் தமிழ் மற்றும் திருவள்ளுவரின் மகிமை குறித்து புகழ்ந்து பேசிய அவர், தமிழ் தான் உலகின் பழமையான மொழி என்றும், உலகின் பழமையான மொழி இந்தியாவை சேர்ந்தது என்பதை விட நமக்கு வேறு என்ன பெரிய பெருமை இருக்க முடியும் என கூறினார்.
திருவள்ளுவருக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அன்று இரவு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அவரது மனைவியும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானரை பிரதமர் மோடிக்கு இமானுவேல் மேக்ரான் அளித்தார்.
இந்த சந்திப்பில் இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரான்ஸ் நாட்டின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு ஒருநாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் சென்றார். அந்நாட்டு தலைநகர் அபுதாபிக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஷயாத் அல் நஹ்யான் வரவேற்றார்.

அதன் பின்னர் அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். எரிபொருள், உணவு பாதுகாப்பு, இருநாட்டு வர்த்தக உறவு குறித்து இருவரும் விவாதித்தனர். அந்த சந்திப்பில் இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக அபுதாபியில் ஐஐடி வளாகத்தை தொடங்குவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார். டெல்லி வந்த உடனே அவர் அம்மாநில துணை முதலமைச்சர் சக்சேனாவுக்கு தொடர்புகொண்டு வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார்.












Click it and Unblock the Notifications