அன்புமணியவே நீக்க போறோம்.. பொதுக்குழு எப்படி செல்லும்.. தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் பரபரப்பு புகார்
டெல்லி: தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆனால் பாமகவில் உள்கட்சி பூசல் வெடித்து கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தையில் பரபரப்பாக இருக்க, பாமகவில் தந்தை, மகன் இடையே பனிப்போர் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்புமணி கடந்த வாரம் நடத்திய பொதுக்குழு சட்ட விரோதமானது என்று ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.
பாமகவில் தந்தை, மகன் அதிகார யுத்தம் உச்சத்தில் உள்ளது. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அன்புமணி 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

பொதுக்குழு பஞ்சாயத்து
மேலும் பொதுக்குழு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் என்று பரபரப்பாக இயங்கி வருகிறார். இதேபோல ராமதாஸ் மகளிர் மாநாடு, பொதுக்குழு என்று தன் ஆதரவாளர்களுடன் தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பத்திலும், வேதனையிலும் இருக்கிறார்கள்.
அன்புமணி தரப்பில் கடந்த வாரம் பொதுக்குழு நடத்தப்பட்டது. தலைவர் பதவி காலியாகிவிட்டதால், அன்புமணிக்கு பொதுக்குழு கூட்ட அனுமதியில்லை என்று ராமதாஸ் புகார் எழுப்பினர். இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதில் பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று உத்தரவிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதையடுத்து நடைபெற்ற பொதுகுழுவில் பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. அன்புமணியின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள் ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அன்புமணிக்கு பதிலடி கொடுக்க ராமதாஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதம் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். "தலைவர் பதவிக்கான காலம் நிறைவடைந்த நிலையில், கட்சி நிறுவனரின் ஒப்புதலே இல்லாமல் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளனர். தலைவர் பதவியை நீட்டித்திருப்பது கட்சி விதிகளுக்கு முரணானது.
அன்புமணியை நீக்க
பாமக விதி 13இன் படி பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றுக்கு கட்சி நிறுவனர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் பதவியை தன்னிச்சையாக நீட்டிப்பு செய்துள்ளனர். தலைவர் பதவியில் இருந்த அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது அல்லது சஸ்பெண்ட் செய்வதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று ராமதாஸின் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications