சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி மறுப்பு.. சாலையில் படுத்து பவன் கல்யாண் போராட்டம்.. இரவில் பரபர
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் அம்மாநில போலீசார் கைது செதுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சந்திர பாபு நாயுடுவை பார்க்க வந்த பவன் கல்யாணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் சீரற்ற நிலையில் இருப்பதால் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரிடம் குழுவினர் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 5 மணி நேரத்துக்கு மேலும் அவரிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார்.
அப்போது விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக பவன் கல்யாண் சென்றார். ஆனால் ஆந்திர எல்லைக்குள் வந்ததும் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காவல்துறை நடவடிக்கையால் ஆவேசம் அடைந்த பவன் கல்யாண் சாலையில் அமர்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திரா என்ன தனிநாடா, பாஸ்போர்ட் அவசியமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முன்னதாக எஸ்.ஐ.டி விசாரணையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அவரது குடும்பத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications