கொரோனா தொற்றுடைய எய்ம்ஸ் மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் பாசிட்டிவ்..!
டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த எய்ம்ஸ் மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த எய்ம்ஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக அந்த மருத்துவரை தனிமைப்படுத்தி தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனிடையே கொரோனா பாதித்த மருத்துவரின் 9-மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுடைய எய்ம்ஸ் மருத்துவரை பொறுத்தவரை எந்த வெளிநாடு பயண வரலாறும் இல்லாதவர். அப்படியிருந்தும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதால் நோய் தொற்றுக்கான ஆதாரங்கள் மற்றும் தொடர்புகள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர். இதனிடையே சக மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளதால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதேபோல் டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு உறைவிட மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளித்த காரணமாக அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் எதன் காரணமாக இரண்டு மருத்துவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஆதாரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் டெல்லி சர்தார் படேல் மருத்துவமனை மற்றும் டெல்லி புற்றுநோய் மையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி மருத்துவர்களையும் விட்டு வைக்காமல் கொரோனா கபளீகரம் செய்து வருவதால் இந்த கொடிய நோயை ஒழிப்பதற்கான பணிகளை மத்திய சுகாதாரத்துறை மிக தீவிரம் காட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications