ஒன்னுமே புரியலையே! ஒரு புறம் காங். உடன் லன்ச்.. மறுபுறம் கேசிஆர் உடன் டின்னர்! பிகே பிளான் தான் என்ன
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என அக்கட்சியில் குரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2022 சட்டசபைத் தேர்தல் படுதோல்விக்குப் பின் இந்த கோரிக்கை மேலும் அதிகரித்தது.
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் சமீபத்தில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து 2024 தேர்தலுக்கான திட்டத்தை முன் வைத்திருந்தார்,

காங்கிரஸ்
காங்கிரஸ் மறுசீரமைப்பு குறித்தும் அதற்கான திட்டங்களையும் பிகே இந்த சந்திப்பில் விளக்கி இருந்தார். பிரசாந்த் கிஷோர் தொடர்ச்சியாக 3 நாட்களில் இரு முறை காங்கிரஸ் தலைமையைச் சந்தித்தார். இது தொடர்பாக ஆலோசிக்கக் காங்கிரஸ் சிறப்புக் குழுவை உருவாக்கி உள்ளது. பிகே திட்டம் குறித்து கட்சியில் யாருக்கும் அதிருப்தி இல்லை என்பதால் அவர் காங்கிரஸில் இணைய வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இறுதி முடிவை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

திடீர் விசிட்
பிகே திட்டத்திற்குக் காங்கிரஸ் மிக விரைவில் கிரீன் சிக்னல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் திடீரென தெலங்கானா தலைநகர் சென்றுள்ளார். ஹைதராபாத்தில் முதல்வர் கே சந்திரசேகர் ராவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிகே முகாமிட்டுள்ளார். இந்த திடீர் சந்திப்பு அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்முறை இல்லை
நேற்று காலை ஹைதராபாத் வந்த பிகே, இரவு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தங்கினார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றும் தொடரும். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்திற்கு வெளியே 62 கி.மீ தொலைவில் உள்ள எர்ரவெல்லியில் உள்ள கே.சி.ஆரின் பண்ணை வீட்டில் இருவருக்கும் தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது பிகே சில கிராமங்களுக்குச் சென்று, மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்ததாகக் கூறப்பட்டது.

ஏன் சலசலப்பு
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் கேசிஆர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தெலங்கானா சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 பொதுத் தேர்தலில் பிகே தன்னுடன் இணைந்து பணியாற்றுவார் என்று அறிவித்திருந்தார். தெலங்கானாவில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், பிகேவின் இந்த நடவடிக்கை கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு வல்லுநர் குழு கூட, அவர் பிற கட்சிகளுடன் இனி இணைந்து பணியாற்றக் கூடாது என்ற நிபந்தனையை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகே பிளான்
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காங்கிரஸ் தலைமைக்கு பிகே முன்மொழிந்த திட்டத்தில் தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் கேசிஆர் கட்சிக்குக் கூட்டணி அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், கேசிஆர் கட்சியும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இத்திட்டத்திற்கு ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் அங்குப் பிரதான போட்டியையே இரு கட்சிகளுக்கும் இடையே தான்.

முரண்டு பிடிக்கும் காங். தலைவர்
மேலும், 2023 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை தெலங்கானா காங்கிரஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வரும் மே 6இல் ராகுல் காந்தியும் கூட தெலுங்கானாவிற்குப் பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த்ச சூழலில் கே.சி.ஆரை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது காங்கிரசில் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் கேசிஆரும் தெலங்கானா தாண்டி தேசிய அரசியலில் களம் காண விரும்புகிறார்.

என்ன் செய்யப்போகிறார் கேசிஆர்
பாஜகவுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள கோசிஆர், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் போன்ற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அணியை உருவாக்கவும் முயல்கிறார். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் முக்கிய ஆயுதம் என்பதை கேரிஆர் உணர்ந்தே இருக்கிறார். இருப்பினும், தெலுங்கானாவில் இருக்கும் பிரச்சினையை இரு தரப்பும் அப்படித் தீர்ப்பார்கள் என்பது புதிராகவே உள்ளது.












Click it and Unblock the Notifications