ஒவ்வொரு இந்தியரின் தலையிலும் ரூ.1.5 லட்சம் கடன்.. மத்திய அரசின் கடனை பட்டியலிட்ட பிரியங்கா காந்தி
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சுமார் 150 லட்சம் கோடியை கடன் வாங்கியிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியர்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் ரூ.1.5 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாஜக மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக விமர்சித்திருக்கிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது x சோஷியல் மீடியா தளத்தில், “நடப்பு நிதியாண்டில் ரூ.14 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கப் போகிறது என்று நிதி அமைச்சகம் கூறியது ஏன்? சுதந்திரத்திற்குப் பிறகு 2014 வரை 67 ஆண்டுகளில், நாட்டின் மொத்தக் கடனே வெறும் ரூ.55 லட்சம் கோடியாகதான் இருந்தது. ஆனால் இதை கடந்த பத்தாண்டுகளில் நரேந்திர மோடி அரசு ரூ.205 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது.
இதனால் இன்று இந்தியர்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.1.5 லட்சம் கடன் இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் வேலைகள் உருவாக்கப்பட்டதா? விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்ததா? புதியதாக பள்ளிகள், மருத்துவமனைகளும் கட்டப்பட்டதா? பொதுத்துறை வளர்ந்திருக்கிறதா? அல்லது நலிவடைந்துள்ளதா? பெரும் தொழில் நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருக்கின்றனவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "மேற்குறிப்பிட்ட எதுவும் நடக்கவில்லையெனில் இந்தியா வாங்கிய கடன்கள் எங்கு சென்றன? பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் சீர்குலைந்து விட்டது, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியெனில் வாங்கிய கடன்கள் எங்கே போனது? அந்த பணம் யாருக்காக செலவு செய்யப்பட்டது? யாருக்கு எவ்வளவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன? பெரும் கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடிக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது?
மீண்டும் கடன் வாங்க துடிக்கும் மத்திய அரசு, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் அதிகரித்து வரும் நிலையில் ஏன் மக்களைக் கடனில் மூழ்கடிக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே வருமான வரித்துறை காங்கிரஸின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலைகளை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் ரூ.1823 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications