சாலையில் படுத்த பிரியங்கா காந்தி.. ராகுல் தலைமையில் டெல்லியை திணறடித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி இன்று 2வது நாளாக டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்தினர். இவர்களை தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் பிரியங்கா காந்தி சாலையில் படுத்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 2வது நாளாக 'இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
ராகுல் தலைமையில் எம்பிக்கள் பஸ்களில் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பயணம் மேற்கொண்டனர். டெல்லி விண்ஸ்ட்சர் பகுதியில் சென்றபோது பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தினர். பஸ்சை மேற்கொண்டு அனுமதிக்க மறுத்தனர்.
இதனல் கோபமான எம்பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் பஸ்சை விட்டு இறங்கி சாலையில் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்கள் 'ஜனநாயகத்தை காப்பாற்று'.. 'வாக்கு திருட்டை தடுத்து நிறுத்து' என்பது போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சாலை என்பதால் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. வாகனங்களால் நகர முடியவில்லை. இதனால் போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் எம்பிக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டனர். இந்த சமயத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் பெண் எம்பிக்கள் திடீரென்று சாலையில் படுத்து போராட தொடங்கினர். இது பரபரப்பை கூட்டியது. போலீசார் சமாதானம் சொல்லியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனால் வேறு வழியின்றி போலீசார் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 'இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நேற்றைய தினம் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி சென்றனர். அப்போதும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஆகாஷ்வாணி அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
