உ.பி. அரசியலில் திருப்பம்? சமாஜ்வாதியின் கூட்டணி கட்சி தலைவருடன் பிரியங்கா காந்தி 'திடீர்' சந்திப்பு
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரியை லக்னோவில் சந்தித்து பேசிய விவகாரம் உத்தர பிரதேச மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் (ஆர்எல்டி) கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது புது திருப்பமாக பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது.

கூட்டணி அழுத்தம்
ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் 'பிரதிக்யா பேரணியில்' உரையாற்றிய பிரியங்கா காந்தி டெல்லிக்கு திரும்பும் முன்பு லக்னோ விமான நிலையம் சென்றார். அதே நேரத்தில் சவுத்ரியும் விமான நிலையத்திற்கு வந்திந்தார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எல்.டி.யின் மூத்த தலைவர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், "ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கர் அரசின் சார்டட் விமானத்தில் பிரியங்கா காந்தியும் ஜெயந்த் சவுத்ரியும் டெல்லிக்கு புறப்பட்டனர் என்றார்." உத்தரபிரதேச தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாடி கட்சிக்கு அழுத்தம் கொடுக்க ராஷ்ட்ரிய லோக்தளத்தை காட்டி காங்கிரஸ் மிரட்டல் விடுக்கிறதா என்பதை இந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் எழுப்பியுள்ளன.

ஒரே விமான நிலையம்
இருப்பினும் இது அழுத்தம் தரும் திட்டமில்லை என்கிறது காங்கிரஸ். "ஜெயந்த் சவுத்ரியின் விமானம் மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்தது. அவர் மாலை 4 மணியளவில் விமான நிலையத்தை அடைந்தார். மாலை 5 மணியளவில், பிரியங்கா காந்தி அங்கு வந்தார். பிரியங்கா காந்தி அவரை தான் செல்லும் தனியார் விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்து அழைத்தார். ஆனால், ஜெயந்த் சவுத்ரி அந்த விமானத்தில் ஏற தயங்கினார். இருப்பினும் ஜெயந்த் சவுத்ரி விமானம் தாமதமான நிலையில், ஜெயந்த் சவுத்ரி உட்பட ஆர்எல்டி கட்சியைச் சேர்ந்த 3 பேர் பிரியங்கா காந்தி சென்ற விமானத்தில் புறப்பட்டனர்.

கூட்டணிக்குள் குழப்பம்?
ஆர்எல்டி மற்றும் சமாஜ்வாதி இடைய சீட் பகிர்வு விரைவில் செய்யப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியுடன் ஆல்எல்டி தலைவர் சந்தித்து பேசி விமானப் பயணம் செய்துள்ளது உ.பி. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு உத்தர பிரதேசத்தில் ஆதரவு
மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் மத்தியில் ஆர்எல்டி கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்க்கும் பிரச்சினையில் சமாஜ்வாதியும், ஆர்எல்டியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை போல செயல்பட்டு வருகின்றன. மேற்கு உ.பி.யில் செல்வாக்குள்ள ஆர்எல்டி கட்சியை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வது வாக்குகள் சிதறாமல் தங்களுக்கு வர வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சி காய் நகர்த்தி வந்தது. ஆனால், இந்த திடீர் திருப்பங்கள், கூட்டணி நிலைக்குமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.

என்ன நடக்கும்
சமாஜ்வாதி கூட்டணியில் ஆர்எல்டிக்கு 22 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க பிரியங்கா காந்தியுடனான ஜெயந்த் சவுத்திரி சந்திப்பு உதவுமா அல்லது கூட்டணி முறிவுக்கு வழி வகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications