கொலை பண்ண பிறகு பேசின பணத்தை தரல.. போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த கூலிப்படை தலைவன்.. சோலி முடிஞ்சு!
ஆக்ரா: கொலை வழக்கில் போலீசில் உண்மையை சொன்னால் அதிக தண்டனை கிடைக்கும் எனக் கருதி குற்றம் செய்த நபர்கள் பொய்களை சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். ஆனால், ஒரு கொலையாளியே போலீஸ் நிலையத்துக்கு சென்று கொலைக்கு பேசிய முழு கூலியை வாங்கி தரும்படி புகார் அளித்த விசித்திர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
பொதுவாக குற்ற செயல்களை செய்தவர்கள் உடனடியாக போலீசுக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிடுவார்கள். குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் போலீசார் படாத பாடு பட வேண்டியிருக்கும். ஆனால் நானும் ரவுடிதான் என சொல்லிக் கொண்டு போலீஸ் ஜீப்பில் வடிவேலு தலைநகரம் படத்தில் எப்படி வாண்ட்டட் ஆக ஜீப்பில் ஏறி.. எப்படி போலீசிடம் சிக்குவாரோ அதேபோல, உத்தர பிரதேசத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொலை செய்வதற்காக என்னிடம் ரூ.20 லட்சம் பேரம் பேசிவிட்டு, கொலை செய்து முடித்த பிறகு வெறும் ஒரு லட்சத்தை மட்டும் தந்து ஏமாத்திட்டாங்க.. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூலிப்படை தலைவர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பற்றிய விவரத்தை பார்க்கலாம்..
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வந்த பெண் அஞ்சலி. வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் நிதின் குப்தா. கணவன் மனைவி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். நிதின் குப்தாவுக்கு சொந்தமான வீட்டில் அஞ்சலி வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த வீட்டை நிதின் குப்தா, 2 பேருக்கு விற்றுவிட்டார். ஆனால் அஞ்சலி அந்த வீட்டில் இருந்து செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் அஞ்சலிக்கும் நிதின் குப்தாவிடம் வீட்டை வாங்கியவருக்கும் பிரச்சினை இருந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீட்டை வாங்கியவர்கள் கூலிப்படையை ஏவி அஞ்சலியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும், அஞ்சலியை சுட்டுக்கொன்றதாக கூலிப்படை தலைவர் நீரஜ் சர்மா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீரஜ் சர்மா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த நீர்ஜ் சர்மா தான் தற்போது போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இவரது புகாரை பார்த்து போலீசார் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த புகாரில், நிதின் குப்தா என்பவர் என்னை அணுகினார். அவரது மனைவி அஞ்சலியை கொலை செய்ய சொல்லி என்னிடம் கூறினார். இதற்காக நாங்கள் பேரம் பேசினோம். இறுதியாக 20 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னார்.
நானும் ஒப்புக்கொண்டு விட்டு முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை வாங்கிக்கொண்டு அஞ்சலியை சுட்டுக்கொன்றோம். மீதி பணத்தை வாங்குவதற்குள் எங்களை போலீசார் கைது செய்துவிட்டார்கள். 1 வருஷமாக ஜெயிலில் தான் இருந்தேன். இப்போது தான் நான் வெளியில் வந்துள்ளேன். ஆனால் பேரம் பேசியபடி மீதி 19 லட்சம் ரூபாயை நிதின் குப்தா தரவில்லை.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அஞ்சலியை கொலை செய்வதற்காக பேசப்பட்ட 20 லட்சத்தில் 1 லட்சம் போக மீதி 19 லட்சத்தை தரவேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார். மேலும் பேரம் பேசியதற்கான ஆதார ஆடியோவையும் நீரஜ் சர்மா வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அஞ்சலி வழக்கில் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications