புல் & புல்டோசர்.. இரண்டிற்கும் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.. யோகி அரசை விளாசிய அகிலேஷ் யாதவ்
டெல்லி: உபி மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், வரும் தேர்தலில் புல் மற்றும் புல்டோசர் என இரண்டிற்குமே மக்கள் பதிலளிப்பார்கள் என அவர் சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சௌபாட்டியா காலனியில் என்ற பகுதியில் குறுகிய தெரு ஒன்றில் ஒரு சிறுமியை மாட்டு முட்டி தள்ளி இருக்கிறது. அந்தச் சிறுமியைத் துரத்தி, கீழே தள்ளி, பின்னர் மிதித்துள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அந்த மீட்டின் மீது கற்களை வீசி, உரிய நேரத்தில் சிறுமியை மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாக் சம்பவம்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மாடு துரத்திக் கொண்டு வரவே, அச்சத்தில் அந்த சிறுமி ஓடுகிறார். உதவி கேட்டு கத்திக் கொண்டே சிறுமி ஓடுகிறார். ஒரு கட்டத்தில் திடீரெனக் கால் தவறி அச்சிறுமி கீழே விழுந்துவிடுகிறார். இதையடுத்து அந்த மாடு சிறுமியை முட்டி தள்ளி இருக்கிறது. சிறுமியை எழுந்திருக்கக்கூட விடாமல் முட்டி தள்ளியுள்ளது.
பயத்தில் சிறுமி கத்தவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்துள்ளனர். அவர்கள் மாட்டை விரட்டச் சத்தம் போட்டுள்ளனர். மேலும், மாட்டின் மீது கற்களையும் வீசியுள்ளனர். ஆனாலும், அந்த மாடு லேசில் விட்டுவிடவில்லை. சிறுமியைக் கீழே தள்ளித் தொடர்ந்து முட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குப் பலரும் சேர்ந்து கத்தி, கற்களை வீசித் தாக்கவே ஒரு கட்டத்தில் மாடு பின்வாங்கியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை மாட்டிடம் இருந்து இழுத்துவிட்டனர்.
நெட்டிசன்கள்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் இந்தச் சம்பவம் மனதை உலுக்குவதாகப் பதிவிட்டனர். சாலைகளில் சற்று திரியும் விலங்குகள் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளதால் அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும், சிறுமியின் உயிரைக் காப்பாற்றத் தைரியமாக முன்வந்த இளைஞர்களையும் நெட்டிசன்கள் பாராட்டினர்.
अगले चुनाव में जनता बुल और बुलडोज़र दोनों का इलाज कर देगी।
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 3, 2026
ये भाजपाई सत्ताधीश कभी अपनी सिक्योरिटी छोड़कर सड़क पर पैदल चलें तो यही सांड उन्हें हवा में उछाल देगा।
14 दिन में समस्या के समाधान का जुमला 14 साल में भी पूरा नहीं होगा। भाजपाई झूठ के सुपर स्टॉकिस्ट हैं। झूठ भाजपा की… pic.twitter.com/K0rKiwRlZn
அகிலேஷ் யாதவ்
இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உபி அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அடுத்த தேர்தலில், மக்கள் புல் (Bull) மற்றும் புல்டோசருக்கும் சேர்த்து ஒரு சிகிச்சையை அளிப்பார்கள். பாஜக தலைவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து வீதிகளில் நடந்தால், இந்தக் காளைகள்தான் அவர்களைத் தூக்கி எறியும்.
14 நாட்களில் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என அவர்கள் சொன்னார்கள். ஆனால், 14 ஆண்டுகள் ஆன பிறகும் பிரச்சினை தீரவில்லை. பாஜகவினருக்குப் பொய்கள் தான் ஒரே குறி. பொய் தான் பாஜகவின் ஒரே அரசியல் அடித்தளம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். சிறுமியின் தாக்குதல் வீடியோவையும் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது இல்லை என்றும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறுமியைக் காப்பாற்றிய இளைஞர்களையும் அகிலேஷ் யாதவ் பாராட்டினர்.
நடவடிக்கை
இந்தச் சம்பவம் உபியில் பெரிதாக வெடித்த நிலையில், மாநகராட்சி கால்நடை நல அதிகாரி டாக்டர் அபிநவ் வர்மா இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி குழுவினர், சாலையில் சுற்றித் திரிந்த காளை உட்பட ஐந்து பசுக்களைப் பிடித்து, அருகே உள்ள தொழுவத்தில் அடைத்தனர். மேலும், விசாரணையில் சிறுமியைத் தாக்கிய காளையின் உரிமையாளர் முன்னா கோஷி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications