கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?
டெல்லி: ஒரே நாளில் 88 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போட்டது சாதனையாக பேசப்பட்ட மறுநாளே தடுப்பூசிகள் போடப்படுவோர் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் குறைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக திங்களன்று அதிகமாக தடுப்பூசி போடப்பட்டதாக சொல்லப்பட்ட பாஜக ஆளும் 7 மாநிலங்களின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
உலக நாடுகளிலேயே கொரோனா 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியாதான். இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று குறைய தொடங்கி இருக்கிறது.
அதேநேரத்தில் டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கொரோனா தாக்குதலும் தொடங்கி இருக்கிறது. இது கொரோனா 3-வது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

ஒரே நாளில் 88 லட்சம் தடுப்பூசிகள்
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று நாடு முழுவதும் 88 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது சாதனையாக பெருமிதமாக சொல்லப்பட்டது. பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

குறைந்த தடுப்பூசிகள் எண்ணிக்கை
ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் மொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை சட்டென குறைந்து 53.86 லட்சமாக மட்டுமே இருந்தது. இதனால் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் சாதனை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

பாஜக ஆளும் மாநிலங்கள்
ஏனெனில் திங்கள்கிழமையன்று அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக சொல்லப்பட்ட 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள். அதுவும் கொரோனா பாதிப்பு விவரங்களில் சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் மத்திய பிரதேசத்தில்தான் மிக அதிகமாக 16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது.

ம.பி. கணக்கில் கோல்மால்?
மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந் தேதியன்று ஒரே நாளில் 37,904 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஜூன் 20-ந் தேதியன்று வெறும் 4,098 பேர் மட்டுமே இம்மாநிலத்தில் தடுப்பூசி போட்டிருந்தனர். ஆனால் ஜூன் 21-ந் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 16,95,592 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்திருப்பதுதான் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி. பாஜக அரசு விளக்கம்
தடுப்பூசி போட்டுக் கொண்டோர் கணக்கில் குளறுபடி செய்கிறதா மத்திய பிரதேச பாஜக அரசு? அல்லது கொரோனா தடுப்பூசி இருப்புகளை வெளியில் சொல்லாமல் வைத்து ஒரே நாளில் தடுப்பூசி போட்டதா மத்திய பிரதேச பாஜக அரசு? என்பதுதான் கேள்வி ஆனால் மத்திய பிரதேச மாநில அரசோ, கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் பதுக்கி வைத்து எல்லாம் போடவில்லை எனவும் விளக்கம் கொடுக்கிறது.












Click it and Unblock the Notifications