பாகிஸ்தானுக்கு 19%.. இந்தியாவுக்கு மட்டும் 50% வரியா? மோடி-டிரம்ப் நட்பு எங்கே போச்சு? -ரகுராம்ராஜன்
டெல்லி: "சர்வதேச அளவில் சீனாவை விட இந்தியாதான் அமெரிக்காவிடமிருந்து அதிக வரியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு கூட 19%தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு 50% வரி போடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் பிரதமர் மோடி-டிரம்ப் நட்பு என்ன ஆச்சு? எங்கே போச்சு?" என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிகாகோ குளோபல் அஃபேர்ஸ் கவுன்சில் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த ரகுராம் ராஜன், மேற்குறிப்பிட்டவாறு பேசியிருக்கிறார். தொடர்ந்து அவர் பேசியதாவது,

"கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவில் இருந்தது. ஆனால் இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளது. அமெரிக்க வரியால் தலைவர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. சாமானிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பாகிஸ்தான் மீது 19% வரிதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டிருப்பது மோடியின் நடப்பில் விழுந்த அடி என இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன.
அமெரிக்காவை நம்ப முடியாது என்பதற்கு கடந்த கால உதாரணங்களையும் என்னால் சொல்ல முடியும். 1970களில், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், வெளியுறவுச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆகியோர் 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பாகிஸ்தானுக்கு உதவியது. எனவே இந்தியா சோவியத் பக்கம் அதிகமாக சாய்ந்திருந்தது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சோவியத் உறவிலிருந்து வெளியே வர நீண்ட காலம் ஆனது.
என்னதான் குவாட் கூட்டணி மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வரி விதிப்பு கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது இந்தியாவுக்கு வேறு வழியும் கிடையாது. சீனாவின் முதலீடுகளை நாங்கள் வரவேற்றாலும், சீன பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
சூழல் இப்படி இருக்கையில், ஒரு முறை உறவுகள் சீர்குலைந்தால், மீண்டும் உருவாக்குவது கடினம். இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும். வரியால் ஏற்படும் வர்த்தக இடைவெளியை வங்கதேசம் அல்லது வியட்நாம் போன்ற நாடுகள் நிரப்பிவிடும். இந்த வரி விதிப்பால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் பாதிக்கப்படும். இது நீடித்தால் நிரந்தரமான பாதிப்புகள் ஏற்படும்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications