எல்லோரும் சமம் என சொல்லும் இந்திய அரசியலமைப்புக்கு பாஜகவால் ஆபத்து: ஜெர்மனியில் ராகுல் காந்தி பேச்சு
பெர்லின்: எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, சமீபத்தில் ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்திய அரசியலமைப்பை ஒழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் அனைவருக்கும் சம உரிமையை வழங்கும் அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும், காங்கிரஸ் ஆதரவு தொழிலதிபர்களை பாஜக மிரட்டுவதாகவும் அவர் சாடினார்.
கடந்த வாரம் ஜெர்மனி நாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்கு பெர்லினில் உள்ள ஹெர்டி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.
இந்த ஒரு மணிநேர உரையின் வீடியோவை, காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில் பாஜகவைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, அமலாக்கத்துறை மற்றும் சிபஐ போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்துவதாகச் சாடினார்.

ராகுல் காந்தி
மேலும், இந்திய அரசியலமைப்பை ஒழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என சாடிய ராகுல் காந்தி, அனைவருக்கும் சம உரிமையை வழங்கும் அரசியலமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அரசு ஏஜென்சிக்களை கைப்பற்ற முழு அளவில் தாக்குதல்கள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் ஆதரவு தொழிலதிபர்கள் மிரட்டப்படுவதாகவும், இந்தியாவில் பல நிறுவனங்களால் முறையாக பிஸ்னஸ் செய்ய முடியவில்லை எனச் சாடினார்.
போராட்டம்
அதேநேரம் பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற, ஒரு வலுவான எதிர்க்கட்சிக் கட்டமைப்பை உருவாக்குவோம் என்றும் ராகுல் காந்தி உறுதிப்படத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நாங்கள் பாஜகவுடன் போராடவில்லை. இந்திய அமைப்புகளைக் கைப்பற்ற முயற்சிகள் நடக்கிறது. அதற்கு எதிராகவே நாங்கள் போராடி வருகிறோம்.. மேலும், இப்போது இந்தியாவில் நடக்கும் தேர்தல் முறையில் அடிப்படைப் பிரச்சனை இருப்பதாக நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
இந்திய ஜனநாயகம்
சர்வதேச ஜனநாயகம் பற்றிப் பேசும்போது உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிக்கலான ஜனநாயக நாடான இந்தியா பற்றிப் பேசாமல் தவிர்க்க முடியாது. இந்திய ஜனநாயகம் என்பது ஒரு சர்வதேச சொத்து.. இந்திய ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதல் என்பது உலக ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். ஹரியானா தேர்தலில் என்ன நடந்தது என்பதை நாங்கள் தெளிவாகக் காட்டிவிட்டோம். மேலும், மகாராஷ்டிரா தேர்தலும் கூட நியாயமானதாக நடந்தது போலத் தெரியவில்லை" என்றார்.
தொடர்ந்து பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி, "சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பாஜக ஒரு ஆயுதம் போலப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போடும் பெரும்பாலான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பொருளாதாரம்
பிரதமர் மோடியின் பொருளாதாரப் பொருளாதாரக் கொள்கையையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது என்றும் இது இப்போது மிகவும் சிக்கலான ஒரு சூழலில் தள்ளப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். அவர் மேலும், "நாட்டில் பலர் மோடியை ஆதரிப்பது உண்மை தான்.. அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பாலான இந்தியர்களின் சித்தாந்தம் பிரதமருக்கு எதிராகவே இருக்கிறது. மோடியிடம் நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. இது ஆழமான சமூக பதற்றங்களை உருவாக்கும் அபாயம் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications