நேஷனல் ஹெரால்ட்.. அமலாக்கத்துறை விசாரணையில் 2வது நாளாக ராகுல் காந்தி ஆஜர்! காங். பெரும் போராட்டம்
டெல்லி: நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இன்றும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வருகிறார்கள்.
நேற்று ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் 9 மணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை, பல்வேறு இடைவெளிகளுடன் இரவு வரை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆவார். நேற்று ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் செய்தனர். டெல்லியில் பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் களமிறங்கி போராட்டங்களை மேற்கொண்டனர்.

ராகுல் காந்தி
அமலாக்கத்துறை பாஜகவின் கைப்பாவையாக சொல்கிறது. அமலாக்கத்துறையை வைத்து ராகுல், சோனியாவிற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதிகாரத்தை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று கூறி காங்கிரஸ் கட்சியில் டெல்லி போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். நேற்று விசாரணைக்கு ஆஜாராகும் போதே ராகுல் காந்தி மாபெரும் படை சூழ வந்தார். இந்த போராட்டம் காரணமாக மேற்கு டெல்லியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேஷனல் ஹெரால்ட்
அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், சட்டீஸ்கர் முதல்வர் புபேந்திர சிங் பாகல், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் சுர்ஜ்வலா, கேசி வேணுகோபால், அதிர் ரஞ்சன் சவுத்திரி, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ் ஆகியோர் போராட்டத்தின் போது போலீஸ் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர்.

கை முறிவு
இதில் எம்பி ப. சிதம்பரம் கை எலும்பு முறிந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. அதேபோல் கேசி வேணுகோபால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் காங்கிரஸ் எம்பிக்கள் 26 பேர், எம்எல்ஏக்கள் 5 பேர், 459 நிர்வாகிகள் போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்று போராட்டத்திற்கு இடையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உணவு இடைவேளையின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோனியா காந்தியை சந்தித்தனர். நேற்று விசாரணையில், நேஷனல் ஹெரால்ட் பங்குகள் வாங்கப்பட்டது எப்படி, யங் இந்தியா நிறுவனம் செயல்படுவது எப்படி உள்ளிட்ட விவரங்கள் குறித்த கேள்விகள் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.

இன்றும் விசாரணை
அவர் இன்றும் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில் தற்போது விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வருகிறார்கள். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கியது ஆகும். இந்த நிலையில் இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. பின்னர் நஷ்டம் காரணமாக 2008ல் பத்திரிக்கை மூடப்பட்டது.
Recommended Video

பங்குகள் மாற்றம்
இந்நிறுவனத்தின் பங்குகள்ளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு 2010ல் சோனியா, ராகுல் இயக்குனர்களாக உள்ள யங்இந்தியா நிறுவனம் வாங்கியது. நேஷனல் ஹெரால்ட் பங்குகளை வாங்கியது பற்றி அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, இதில் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது என்பதே புகார். பல கோடி இதில் மோசடி நடந்தாக புகார் உள்ள நிலையில்தான் இந்த விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
