ஐரோப்பாவே விவாதிக்கிறது.. ஆனால் மோடி மட்டும் ‛கப்சிப்’.. மணிப்பூர் வன்முறையில் ராகுல் ‛அட்டாக்’
டெல்லி: மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிகின்ற நிலையில், பிரதமர் இது குறித்து வாய் திறந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள் கலவரமாக மாறி தற்போது வரை 100க்கும் அதிமானோரை பலி கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர் மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை இயற்றியிருந்தது. அதில், "சிறுபான்மையினர், பெண்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நடைபெறும் வன்முறையானது மத ரீதியாகவும் இன ரீதியாகவும் நடைபெறுகிறது.
குறிப்பாக சொல்வதெனில் இந்துக்கள் அதிகம் இருக்கும் மைதேயி இன மக்களுக்கும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் குக்கி இன மக்களுக்குமிடையில் வன்முறை நீடித்துவருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறை தொடர்பாக மனித உரிமைக் குழுக்கள் அளித்திருக்கும் அறிக்கையில், இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் அரசு தேசிய அளவில் குறிப்பிட்ட மதச் சிறுபான்மையினரை ஒடுக்கும், பிளவுபடுத்தும் இனவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றன.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல கலவரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மாநிலத்திலிருந்து திரும்பப்பெற வேண்டும். மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட வேண்டும்" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். அங்கு அவருக்கு உயரிய விருது கொடுத்து கவுரவப்படுத்தப்பட்டது. இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
அதாவது, "மணிப்பூர் பற்றி எரிகிறது. உள்நாட்டு விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் விவாதிக்கிறது. பிரதமரோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதற்கிடையில் பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறார்" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications