விஜய்யை நம்பி ஏமாந்துட்டேன்? ஸ்டாலின் இப்படி செஞ்சிருக்க மாட்டார்? ராகுல் காந்தி ஆதங்கம்?
டெல்லி: டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது ஒரு புதிய பரபரப்பு தீயாகப் பரவி வருகிறது. முதல்வர் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகளால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிகுந்த மனவேதனையிலும், ஏமாற்றத்திலும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"விஜய்யை முழுமையாக நம்பி ஏமாந்துவிட்டேன்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் மோடியை ஆதரித்து இப்படிச் செய்திருக்க மாட்டார்" என்று தனது மிக நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி வெளிப்படையாகவே புலம்பியதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் வெடித்த ராகுலின் ஆதங்கம்
காங்கிரஸ் கட்சியின் உள்வட்டார தகவல்களின்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து செய்தி டெல்லி தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சம்பிரதாய வாழ்த்தாக இல்லாமல், "வலிமையான இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்புடன் உழைக்கும் பிரதமர்" என்று விஜய் மோடியைப் புகழ்ந்து தள்ளியது ராகுல் காந்தியை ஆழமாகப் பாதித்துள்ளது.
மத்தியில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வரும் ராகுல் காந்தி, "பாஜகவை கொள்கை எதிரியாகப் பார்க்கும் ஒரு தலைவர், எப்படி மோடியின் ஆட்சியை இவ்வளவு வெளிப்படையாகப் புகழ முடியும்? மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக நாங்கள் நாடு தழுவிய அளவில் போராடி வரும்போது, எங்கள் கூட்டணியில் இருக்கும் விஜய் இப்படி பாஜகவுக்கு சாதகமாக சமிக்ஞை கொடுப்பது நம்பிக்கைத் துரோகம் இல்லையா?" என்று தனது ஆதரவாளர்களிடம் கோபத்தையும் வருத்தத்தையும் கொட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஸ்டாலின் இப்படிச் செய்திருக்க மாட்டார்
இந்த விவாதத்தின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும் ராகுல் காந்தி குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. "திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எத்தனையோ அரசியல் முரண்பாடுகள் வந்திருக்கலாம்.. இடப்பங்கீட்டில் இழுபறிகள் நடந்திருக்கலாம். ஆனால், கொள்கை என்று வரும்போது ஸ்டாலின் எப்போதும் உறுதியாக நின்றார். பாஜகவையும் மோடியின் சித்தாந்தத்தையும் வீழ்த்துவதில் அவர் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை. விஜய் இப்போது செய்வதைப் போல, பாஜகவை மறைமுகமாகவோ நேரிடையாகவோ ஆதரிக்கும் ஒரு காரியத்தை ஸ்டாலின் கனவிலும் செய்திருக்க மாட்டார்" என்று ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலையை நம்பி விஜய் பக்கம் கைகோர்த்த முடிவை காங்கிரஸ் இப்போது மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டதோ என்ற எண்ணத்தை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
கூட்டணிக்குள் நிலவும் கடுமையான விரிசல்
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு விஜய் ஆரம்பத்திலிருந்தே தயக்கம் காட்டி வந்தார். காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதும், விஜய் தரப்பு அதற்கு பிடிகொடுக்கவில்லை. இது ஏற்கனவே காங்கிரஸ் தொண்டர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.
அந்தக் காயம் ஆறுவதற்குள், மோடிக்கு விஜய் வானளாவப் புகழாரம் சூட்டியிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. "ஒருபுறம் எங்கள் தலைவரைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுக்கிறார், மறுபுறம் பாஜகவின் பிரதமரைப் பாராட்டுகிறார் என்றால், விஜய் யாருடன் கைகோர்க்க நினைக்கிறார்?" என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கொதித்துப் போயுள்ளனர்.
அடுத்து என்ன நடக்கும்?
விஜய்யின் இந்த இரட்டை நிலைப்பாடு, காங்கிரஸ் உடனான கூட்டணியை மிக பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ராகுல் காந்தியே தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகப் பேசியுள்ள நிலையில், இந்தக் கூட்டணி இனி சுமூகமாகத் தொடருமா அல்லது பெரும் பிளவை நோக்கி நகருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசைத் தீவிரமாக எதிர்க்கும் ராகுல் காந்தியின் அரசியல் பார்வைக்கு மாறாக, முதல்வர் விஜய் எடுத்து வரும் இந்த பாஜக ஆதரவு நகர்வு, தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
