மகாத்மா காந்திக்கு பிறகு சிறந்த தலைவர் ராகுல் காந்தி.. கேஎஸ் அழகிரி பேட்டி
டெல்லி: நாட்டிற்கு மகாத்மா காந்திக்கு பிறகு சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு பாஜக எம்பிக்களை ஒட்டுமொத்தமாக கொந்தளிக்க வைத்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசிய பேச்சால், நாடாளுமன்றத்தில் அனல் பறந்தது.

இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும் போது, "நான் பேசுவதை கேட்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம். நான் இன்று மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை எனவே நீங்கள் பயப்பட வேண்டாம் அமைதியாக இருங்கள். எனது ஒற்றுமையாத்திரை இன்னும் முடியவில்லை. நான் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று இருந்தேன்
ஆனால் பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை அவரைப் பொறுத்தவரை நாட்டில் ஒரு பகுதியாக மணிப்பூர் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். இந்த மத்திய அரசு இந்தியாவுடைய அடிப்படையையே கொலை செய்து விட்டது. மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக மத்திய அரசு பிளந்து விட்டது. எனது ஒரு அம்மா இங்கே எனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் .ஆனால் எனது இன்னொரு தாயான மணிப்பூர் மாநிலத்தின் பாரதமாதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்" என்று கூறினார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொலைப்பேசி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று துயரம் கலந்த, இரக்கம் கலந்த, அதேநேரம் அன்பு மேலீட்டில், மிகவும் உணர்ச்சிகரமான உரையை ஆற்றினார். அவருடைய உரையை மிகச்சிறந்த உரை என்று சொல்லலாம். மாஸ்டர் பீஸ் ஒன்..
நான் வந்து அந்த இளைஞர் (ராகுல் காந்தி) இந்த அளவிற்கு பேசுவார் என்று எண்ணி பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாட்டிற்கு மகாத்மா காந்திக்கு பிறகு சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அவருடைய இந்திய ஒற்றுமை நடைபயணமாக இருந்தாலும் சரி, மணிப்பூர் சென்று பார்த்து வந்த விஷயங்களாக இருந்தாலும் சரி, இவைகள் எல்லாம் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. மணிப்பூரில் என்ன பிரச்சனை, ஏன் பிரதமர் அங்கு போகவில்லை.. உலக நாடுகளுக்கு எல்லாம் போகிறார்.. உள்நாட்டிலும் பல்வேறு நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். மணிப்பூர் போயிருந்தால் அதிகார தரப்பு இன்னும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டிருக்கும்..
இன்னும் கொஞ்சம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும். மணிப்பூரில் இருந்து வந்தவர்களை நான் கேட்டேன்.. சமவெளியில் வாழ்ந்த குக்கி இன பெண்கள்,கற்பழிக்கப்படாமல் விடப்பட்ட பெண்கள் ஒருவர் கூட இல்லை என்றார்கள்.. ஏனெனில் சமவெளியில் குக்கி இன பெண்கள் சிறுபான்மையாக போய்விட்டார்கள். சட்டம் ஒழுங்கு இல்லை. வெளிப்படையான பலாத்காரமாக போய்விட்டது.
இதனுடைய உச்சபட்சம் தான் நிர்வாண ஊர்வலம்.. பெண்ணை நிர்வாணப்படுத்து ஊர்வலம் விடும் அளவிற்கு ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது என்றால், ஏன் அந்த மாநில அரசு கலைக்கப்படவில்லை.. பிற மாநிலங்களில் உடனடியாக ஆட்சியை கலைக்கிறீர்கள் அல்லவா? எங்காவது எதிர்க்கட்சி மாநிலமாக இருந்தால், அங்கு ரவுடிகள் வெட்டிக்கொண்டார்கள் என்றால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என அந்த மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார்.
ஆனால் மணிப்பூரில் அப்படி அல்ல.. வெளிப்படையான ஊர்வலம் நடைபெற்றுள்ளது. உலக நாடுகள் மற்றும் நாகரீகமான மக்கள் நம்மை பற்றி என்ன கருதுவார்கள்.. இதில் அரசியல் என்பது அப்புறம் தான். காங்கிரஸ், பாஜக எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ராகுல் இன்றைய பேச்சுக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் இல்லாத ஒன்றை எங்கே சொன்னார்..
நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள்.. அதனால் தான் உங்களை ராவணன் என்று சொல்லி பேசியிருக்கிறார். அதிகார வெறி பாஜகவினருக்கு தலைக்கேறிவிட்டது. நாடாளுமன்றத்தின் விதிகளுக்கு முரணாக ராகுல் காந்தி பேசவில்லை. எனவே அவர் மன்னிப்பு கேட்க தேவையில்லை" இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேட்டியில் கூறினார்.












Click it and Unblock the Notifications