திடீரென குளத்தில் குதித்த ராகுல் காந்தி.. பீகார் பிரசாரத்திற்கு இடையே நீந்தி, மீன் பிடித்து உற்சாகம்
பாட்னா: பீகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன் பிடித்தார். படகில் மீனவர்களுடன் பயணித்த ராகுல் காந்தி, படகில் இருந்து குளத்தில் குதித்து சிறிது நேரம் நீச்சலடித்து மகிழ்ந்தார்.
243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடத்தப்பட உள்ளது. தற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மறுநாளுடன் முடிவடைவதால் தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். மகாகத்பந்தன் கூட்டணியின் வேட்பாளரும் காங்கிரஸ் தலைவருமான அமிதா பூஷனை ஆதரித்து பெகுசராய் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
பெகுசராய் தொகுதியில் பிரச்சாரம் முடிந்து கிளம்பிய ராகுல் காந்தி, அங்கிருந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த குளத்தில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அங்கு சென்ற ராகுல் காந்தி, அந்த மீனவர்களின் படகில் சிறிது தூரம் பயணித்தார்.
பிறகு திடீரென படகில் இருந்து குளத்தில் குதித்த ராகுல் காந்தி அந்தக் குளத்தில் சற்று தூரம் வரை நீந்திச் சென்று திரும்பினார். மேலும், அங்கிருந்த மீனவர்களுடன் சேர்ந்து கலந்துரையாடிய அவர், அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும், அவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார்.
மீனவர்களுடன் சென்று வலையை பிடித்து மீன்பிடித்த ராகுல் காந்தி, அவர்களுடன் சேர்ந்து மீன்களுடன் கரையேறினார். அவர்களுடன் துணை இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக பெகுசராய் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்க டொனால்ட் டிரம்பிடம் இருந்து போன் வந்தது. சண்டையை நிறுத்தச் சொல்லி அவர் கேட்ட இரண்டாவது நாளில் தாக்குதல் நிறுத்தப்பட்டன. பிரதமர் மோடிக்கு 56 அங்குல மார்பு இருக்கலாம், ஆனால் ஒருவரின் தைரியம் மார்பின் அளவைப் பொறுத்தது அல்ல என்பதே உண்மை" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications