நரைத்த தாடி.. சாதாரண சட்டை.. காய்கறி வியாபாரிக்கு ‛லஞ்ச்’ கொடுத்த ராகுல்! அட இவரா? நெகிழ்ச்சி
டெல்லி: ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் காய்கறி வியாபாரி ராமேஸ்வருக்கு ‛லஞ்ச்' விருந்து வழங்கி உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ராமேஸ்வர் யார்? ராகுல் காந்தியுடன் சேர்ந்து ‛லஞ்ச்' சாப்பிட்டது எப்படி? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். மேலும் அவர் சிலரை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தும் கொடுத்தும் அசத்துகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் விவசாயிகளிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அவர்கள் டெல்லி அருகே வசித்தாலும், டெல்லிக்கு வந்தது இல்லை. டெல்லியை பார்த்தது இல்லை என ராகுல் காந்தியிடம் கூறினர். இதையடுத்து பெண் விவசாயிகளை ராகுல் காந்தி டெல்லி அழைத்து விருந்து கொடுத்தார்.
தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி உடன் ராகுல் காந்தி பெண் விவசாயிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம் கேட்டதற்கு அவர் ‛‛நீங்களே பெண் பாருங்கள்' எனக்கூறிய வீடியோ கூட இணையதளங்களில் வேகமாக பரவியது.
இதன் தொடர்ச்சியாக தான் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் நேற்று காய்கறி வியாபாரி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து அவருக்கு மதிய உணவு வழங்கி அவரோடு அமர்ந்து சாப்பிட்டார். இதுதொடர்பான போட்டோவை ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மேலும் அவர், ‛‛ராமேஸ்வர் ஜி ஒரு கலகலப்பான மனிதர். இவர் கோடிக்கணக்கான இந்தியர்களின் இயல்பான மனநிலையை பிரதிபலித்தவர். பிரச்சனையான சூழ்நிலைகளை புன்னகையுடன் முன்னேற்றம் அடைபவர்கள் தான் ‛‛இந்தியாவின் விதியை உருவாக்குபவர்கள்'' என தெரிவித்து இருந்தார்.
ராகுல் காந்தி பகிர்ந்த இந்த போட்டோ இணையதளங்களில் வேகமாக பரவியது. மேலும் ராமேஸ்வர் என்ற காய்கறி வியாபாரி யார் என்பது பற்றிய தேடல் தொடங்கியது. அப்போது தான் ராமேஸ்வரின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியானது. அதாவது இந்த வியாபாரியின் பெயர் ராமேஸ்வர். இவர் டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறார்.
சமீபத்தில் தக்காளி விலை என்பது உச்சம் தொட்டது. அப்போது தக்காளியை வாங்கி விற்க தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி அவர் கண்ணீர் வடித்திருந்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛தக்காளி விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனை வாங்கி பணம் இல்லை. மாறாக தக்காளியை வாங்கினாலும் அதனை எவ்வளவு விலைக்கு விற்பனை செய்வது என்பது தெரியவில்லை. அதோடு தக்காளி மழை நீரில் நனைந்தாலோ, கையிருப்பு தக்காளிக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ நஷ்டம் ஏற்படும். விலைவாசி உயர்வால் என்னால் ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் கூட வருமானம் ஈட்ட முடியவில்லை'' என அழுதார்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ராகுல் காந்தி, ‛‛நாடு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அதிகாரம்மிக்க மக்கள் அதிகாரத்திலேயே இருக்கின்றனர். மற்றொரு பக்கம் சாதாரண இந்திய குடிமகன் அடிப்படை பொருட்களான காய்கறிகள் கூட இன்றி உள்ளனர். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து இந்த கண்ணீரை துடைக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் காய்கறி வியாபாரியை ராகுல் காந்தி தனது வீட்டுக்கு அழைத்து மதிய உணவு வழங்கி அவருடன் நேற்று கலந்துரையாடினார். இந்த போட்டோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
