பூதாகரமாக வெடிக்கும் நரவனே புத்தகம்.. நாடாளுமன்றத்தில் நின்றபடி ராகுல் சொன்ன விஷயம்.. பரபரப்பு
டெல்லி: முன்னாள் ராணுவத் தளபதி நரவனே புத்தகம் நாளுக்கு நாள் பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது. ஒரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தப் புத்தகம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாகச் சொல்லும் நிலையில், இன்னொரு பக்கம் பென்குயின் பதிப்பகம் இந்தப் புத்தகம் வெளியாகவில்லை எனச் சொல்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி இப்போது சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாகவே முன்னாள் ராணுவத் தளபதி (ஓய்வு) எம். எம். நரவனேவின் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' புத்தகம் குறித்துத் தான் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த புத்தகத்தில் இருக்கும் சில கருத்துகளை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட முயன்றார். இருப்பினும், அது பற்றிப் பேச அவருக்குச் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

புத்தக சர்ச்சை
அந்தப் புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால் அது குறித்து பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து லோக்சபாவை எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முடக்கி வருகிறார்கள். நரவனேவின் இந்தப் புத்தக விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாக வெடித்து வருகிறது. இது தேசியளவில் பேசுபொருளாகும் விஷயமாகவும் மாறிவிட்டது.
ராகுல் காந்தி
இதற்கிடையே நரவனேவின் இந்த புத்தகம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்று நரவனே பொய் சொல்கிறார் அல்லது பதிப்பகமான பென்குயின் பொய் சொல்கிறது என்றார். அதேநேரம் முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்வார் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதில் உள்ள சில தகவல்கள் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் பென்குயின் புத்தகம் வெளியிடப்படவில்லை என்று மறுத்தாலும், அமேசான் போன்ற தளங்களில் அது விற்பனைக்குக் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்..
நரவனேவை நம்புகிறேன்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நரவனே அல்லது பெங்குயின் நிறுவனம் இரு தரப்பில் ஒருவர் பொய் சொல்கிறார்கள்?. என்னுடைய புத்தகத்திற்கான லிங்க் இதில் உள்ளது என நரவனேவே ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், பெங்குயின் நிறுவனம் "புத்தகம் வெளியிடப்படவில்லை" என மறுக்கிறது. ஆனால், அமேசானில் கூட இந்தப் புத்தகம் கிடைக்கிறது. எனவே இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார்கள். முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்வார் என நான் நம்பவில்லை.
தனது புத்தகத்தில் இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் சில கருத்துகளை நரவனே கூறியிருக்கலாம். பெங்குயின் அல்லது முன்னாள் ராணுவத் தளபதியில் யார் உண்மை சொல்கிறார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், நான் நரவனேவை நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
பூதாகரம்
இந்தப் புத்தகம் விவகாரம் கடந்த சில நாட்களாகவே பூதாகரமாகி வருகிறது. முன்னதாக பென்குயின் பதிப்பகம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தது. அதில் இந்தப் புத்தகம் அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் என எந்தவொரு வடிவிலும் வெளியிடவோ அல்லது விற்கப்படவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, புழக்கத்தில் இருக்கும் புத்தகப் பதிப்பு காப்பிரைட் மீறல் என எச்சரித்தது. சட்டவிரோதமாகவும், அங்கீகரிக்கப்படாத முறையிலும் இந்தப் புத்தகத்தைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து.
அதேபோல டெல்லி போலீசாரும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது வெளியிடப்படாத புத்தகத்தின் டிஜிட்டல் வெர்ஷன் ஆன்லைனில் பரவி வருவதாகவும் அது குறித்து விசாரிக்க வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications