"ஒரே நபர், ஒரே முகவரி.. ஆனால் 3 மாநிலங்களில் வாக்களிக்கிறார்.." ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட ராகுல்
டெல்லி: பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிர தேர்தல் முடிவுகளைத் தேர்தல் ஆணையம் திருடிவிட்டதாகவே எதிர்க்கட்சிகள் கருதுவதாகக் காங்கிரஸின் ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் காரணமாகவே எளிதாக கம்யூட்டர் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
டெல்லியில் உள்ள புதிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசினார். வாக்காளர்களின் எண்ணிக்கையிலும், கடைசி நேரத்தில் வாக்குப்பதிவு அசாதாரண அளவுக்கு உயர்ந்தது தேர்தல் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி
மகாராஷ்டிராவில் லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்தும், மாலை 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்ததும் தங்களுக்குச் சந்தேகம் ஏற்படுத்தியதாகக் காந்தி குறிப்பிட்டார். ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "மகாராஷ்டிராவில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். அங்கு ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை விட, மகாராஷ்டிராவில் ஐந்து மாதங்களில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
அங்குச் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோற்கடிக்கப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. இது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. அங்கு லோக்சபா தேர்தல் நடந்து சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் அங்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். மகாராஷ்டிரா தேர்தல் திருடப்பட்டது என்பதே தங்கள் வாதத்தின் மையம்" என்று அவர் தெரிவித்தார்.
மறுக்கும் தேர்தல் ஆணையம்
மேலும், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைப் பகிர மறுத்ததும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், வாக்காளர் பட்டியல் என்பது இந்த நாட்டின் சொத்து. ஆனால் தேர்தல் ஆணையம் அதை எங்களுக்குத் தர மறுக்கிறது. எளிதாக கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது" என்று குறிப்பிட்டார்.

தேர்தல் நாளன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை அழிப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவும் மிகவும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர், "சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக அவர்கள் கூறினர். இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் மகாராஷ்டிராவில் மாலை 5:30 மணிக்கு மேல் பெருமளவில் வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு விகிதம்
ஆனால், அங்கு எங்கள் கட்சியினர் வாக்குச்சாவடிகளில் இருந்தனர். களத்தில் அதுபோல மாலை நேரத்தில் திடீரென வாக்குப்பதிவு அதிகரிக்கவில்லை. அப்படியிருக்கும்போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வாக்குப்பதிவு அதிகரித்தது சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த இரு விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தேர்தல்களைத் திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது என்றே எங்களுக்குத் தோன்றுகிறது" என்றார்.
ஒரே நபர் பல மாநிலங்கள்
மேலும், வாக்காளர் பட்டியலில் இருக்கும் ஒரு நபரின் போட்டோவை காட்டிய ராகுல் காந்தி, "இதோ ஒரு போலி வாக்காளர். இந்த குர்கிராத் சிங் டாங் பெயரும் போட்டோவும் 3, 4 முறை வருகிறது. இவர் கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் வாக்களிக்கிறார். அதேபோல மற்றொரு நபர் ஒரே பெயர், ஒரே முகவரி இருக்கிறது. ஆனால், அவர் கர்நாடகாவில் வாக்களிக்கிறார், உத்தரப் பிரதேசத்திலும் வாக்களிக்கிறார். மகாராஷ்டிராவிலும் வாக்களிக்கிறார். இதுபோல பல ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications