நிறுத்தப்பட்ட தண்டனை! ராகுலால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியுமா? சிக்கல் தானாமே! ஆஹா
டெல்லி: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் எம்பி அந்தஸ்தை பெற உள்ளார். இந்நிலையில் தான் தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் வரும் திங்கட்கிழமை அவரால் பங்கேற்க முடியுமா? இல்லையா? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செசன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ராகுல் காந்தி தனக்கான 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வந்தது. இன்று நீதிபதிகள் பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா, சஞ்சய்குமார் அமர்வில் விசாரணை நடந்தது. அப்போது ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அதற்கான காரணத்தை சூரத் உயர்நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என தெரிவித்ததோடு ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தியின் தகுதி நீக்கமும் செல்லாததாக மாறிவிடுகிறது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடர உள்ளார். இருப்பினும் இதுபற்றிய அறிவிப்பை நாடாளுமன்றத்தின் மக்களவை (லோக்சபா) செயலகம் தான் அறிவிப்பு செய்யும். அதாவது இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் முதலில் மக்களவை செயலகதுக்கு செல்லும்.
அந்த உத்தரவை பார்த்த பிறகு அவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் தகவல் தெரிவிப்பார்கள். இதையடுத்து ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கையை ஓம்பிர்லா அறிவுரையின்படி மக்களவை செயலகம் செய்து அறிவிப்பு வெளியாகும். இந்த அறிவிப்பு வெளியான பிறகே ராகுல் காந்தி எம்பியாக தொடர முடியும். இருப்பினும் இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க லோக்சபா சபாநாயகரை சார்ந்த விஷயமாகும்.

மேலும் குறித்த காலத்துக்குள் ராகுல் காந்தியை எம்பியாக அறிவிக்க வேண்டும் என்ற காலக்கெடுவும் சபாநாயகருக்கு இல்லை. இதனால் சபாநாயகர் சார்பில் அறிவிப்பு வெளியிடும் வரை ராகுல் காந்தி காத்திருக்க வேண்டும். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும் என்றால் சபாநாயகர் மனது வைத்தால் தான் முடியும்.
முன்னதாக லட்சத்தீவை சேர்ந்த எம்பி முகமது பைசலுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ததில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. அவரது தண்டனை கடந்த ஜனவரி மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் முகமது பைசல் தகுதி நீக்க நடவடிக்கை நீக்கம் என்பது தொடர்பான அறிவிப்பு ஒரு மாதம் கழித்து மார்ச் மாதத்தில் தான் வெளியிடப்பட்டது. இதனால் ராகுல் காந்தி விஷயத்திலும் காலம்தாழ்த்தும் நடவடிக்கை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பது சந்தேகம் தான் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications