‛எளிமை’.. அந்த சிரிப்பு இருக்கே! ஷூவை கழற்றி கையில் வைத்து சேற்றில் நடந்த ராகுல்! வியந்த விவசாயிகள்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலையில் திடீரென காரை நிறுத்தி தனது பேண்ட்டை முழங்கால் வரை மடக்கிவிட்டு வயலில் இறங்கி நாற்று நடவு செய்து, டிராக்டர் ஓட்டினார். முன்னதாக அவர் சேறும், சகதியும் நிறைந்த பாதையில் தனது ஷூவை கழற்றி கையில் வைத்து கொண்டு புன்சிரிப்புடன் எளிமையாக மக்களோடு மக்களாக நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில் பாராட்டு குவிந்து வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி. கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக இருந்த நிலையில் மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி சாமானிய மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். மேலும் அவர்களின் குறைகளை கேட்பதோடு, வாழ்வாதாரம் பற்றிய விபரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தான் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு சாலை மார்க்கமாக காரில் சென்று கொண்டிருந்தார். இன்று காலையில் ராகுல் காந்தி ஹரியானா மாநிலம் சோனிபேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது காரீப் பருவ சாகுபடிக்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதை பார்த்த ராகுல் காந்தி காரை நிறுத்தி வயலுக்குள் சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் டிராக்டர் ஓட்டி நிலத்தை தயார் செய்த ராகுல் காந்தி, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடவு செய்தார். முன்னதாக ராகுல் காந்தி விவசாயிகளை சந்திக்க வயலுக்கு செல்லும் பாதை சேறும், சகதியும் நிறைந்து காணப்பட்டார்.
இதையடுத்து ராகுல் காந்தி தனது பேண்ட்டை முழுங்கால் வரை மடக்கி வைத்து கொண்டு சிரித்தபடியே சேறும், சகதியுமான பாதையில் நடந்து சென்றார். இந்த வேளையில் அவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி தனது கையில் வைத்தபடி சென்றார். பொதுவாக அரசியல்வாதிகள் தங்களின் ஷூவை உதவியாளர், கட்சிக்காரர்களிடம் கொடுத்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால் ராகுல் காந்தி தனது ஷூவை யாரிடமும் கொடுக்காமல் கையில் வைத்து கொண்டு நடந்து கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் ராகுல் காந்தியை பாராட்டி வருகின்றனர். முன்னதாக ராகுல் காந்தி கடந்த மே மாதம் இறுதியில் லாரி டிரைவர், கிளீனர்களின் குறைகளை அறிந்து கொள்ளும் வகையில் அவர் லிப்ட் கேட்டு லாரியில் பயணம் செய்தார். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு ராகுல் காந்தி காரில் சென்றபோது தான் இந்த சம்பவமும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications