பாஜக எம்எல்ஏக்களை "சிறை வைத்த" வசுந்தர ராஜே - டெல்லி மேலிடம் சம்மன் - ஜேபி நட்டாவுடன் சந்திப்பு!
டெல்லி: ராஜஸ்தான் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற 7 பாஜக எம்.எல்.ஏக்களை முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா சொகுசு ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட வசுந்தர ராஜே சிந்தியா இன்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ந் தேதி வெளியாகின. ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 69 இடங்கள்தான் கிடைத்தது. ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவால் 4 நாட்களாகிவிட்ட போது யார் முதல்வர் என்ற அறிவிப்பை வெளியிட முடியவில்லை.

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் உறுதியாக உள்ளார். வசுந்த ராஜே சிந்தியாவுக்கு 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது. இந்த எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து வசுந்த ராஜே சிந்தியாவை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 7 புதிய பாஜக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த பாஜக தலைவர் ஒருவர் மகனும் இந்த 7 எம்.எல்.ஏக்களில் ஒருவர். அவர் மூலமாகவே இந்த தகவல் வெளியே பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் பதவிக்கான முட்டி மோதும் வசுந்தர ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந் இந்த 7 எம்.எல்.ஏக்களையும் சொகுசு ஹோட்டலில் அடைத்து வைக்க உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
#WATCH | Former Rajasthan CM and BJP leader Vasundhara Raje arrives at the residence of BJP national president JP Nadda, in Delhi. pic.twitter.com/xZREvYAdO2
— ANI (@ANI) December 7, 2023
இதனையடுத்து பாஜக மேலிடம் வசுந்தர ராஜே சிந்தியாவை டெல்லிக்கு வர சம்மன் அனுப்பியது. இதனையடுத்து டெல்லி வந்தார் வசுந்தர ராஜே சிந்தியா. ஆனால் தாம் மருமகளைப் பார்க்கவே வந்ததாக வசுந்தர ராஜே சிந்தியா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று இரவு திடீரென பாஜக தலைவர் ஜேபி நட்டாவை அவரது இல்லத்தில் வசுந்தர ராஜே சிந்தியா சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ள சாமியார் பாலக்நாத், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications