எதிர்க்கட்சித் தலைவரே சபை மையப் பகுதியில் முழக்கமிடுவதா?துயரமான நாள்- ராஜ்யசபா தலைவர் கடும் கண்டனம்!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சபையின் மையப்பகுதிக்கு வந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரே சபையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிடுவது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் துயரமான நாள் என ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனை வலியுறுத்திய போது அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லோக்சபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. லோக்சபாவின் அடுத்த கூட்டம் ஜூலை 1-ந் தேதி நடைபெறும்.

இதேபோல ராஜ்யசபாவிலும் இன்று காலை முதலே அமளி நீடித்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். ஆனால் இதனை ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் ஏற்க மறுத்தார். இதனால் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 'இந்தியா" கூட்டணி எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இதற்கு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜக்தீப் தன்கர் கூறுகையில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்றைய நாள் துயரமானது. எதிர்க்கட்சித் தலைவரே சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிடுவதா? இதற்கு முன்னர் எப்போதும் இப்படி நடந்ததே இல்லை. இது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய நாடாளுமன்ற பாரம்பரியம் சீர்குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகியோர் சபைக்கு நடுவே நினறு முழக்கமிடுவது மரபுக்கு எதிரானது என்றார்.
மேலும் ராஜ்யசபா முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு சபை கூடியபோதும் தொடர்ச்சியாக அமளி நீடித்தது. இதனால் சபை மீண்டும் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 2 மணிக்கு கூடிய போதும் அமளி நீடித்ததால் மீண்டும் பகல் 2.30 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications