“தம்பி உட்காருங்க..” எல்.முருகன், திருச்சி சிவா இடையே வெடித்த விவாதம்! மாநிலங்களவையில் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான சிறப்பு விவாதத்தில், திமுக எம்பி திருச்சி சிவா பேசிய கருத்துகளுக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதனால் அவையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வெடித்தது.

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற மக்களவையில் 10 மணி வரை சிறப்பு விவாதத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Trichy Siva Dheeran Chinnamalai Rajya Sabha

இதனையடுத்து இரு அவைகளிலும் எம்பிக்கள் விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர். இன்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் தீரன் சின்னமலை குறித்து திருச்சி சிவா பேசியபோது, எல்.முருகனுக்கும் இவருக்கும் இடையில் வாக்குவாதம் வெடித்தது. ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன, திருச்சி சிவா என்னிடம் விவாதம் செய்யாதீர்கள், அதில் உங்களால் ஜெயிக்க முடியாது என்று கூறினார். இதனையடுத்து விவாதங்களின் போது பேசப்பட்டவை அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதுாக சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதனையடுத்து திருச்சி சிவா பேசியதாவது, "இன்றைக்கு கொழுந்து விட்டு இருக்கிற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்ட பொழுது, முதலில் வந்தே மாதரம்தான் பேச வேண்டும் என்று அவ்வளவு வலியுறுத்தி இந்த விவாதத்தை முன்னாள் கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போது அந்த ஆளுங்கட்சியின் வரிசை பார்க்கிறேன். என்னுடைய அருமை நண்பர் அமைச்சர் பிரகலாத் ஜோஷி மட்டும் இருக்கிறார். ஒருவேளை ஷிப்ட் இருக்கும் போல.. அவை முன்னவர் இல்லை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இல்லை, நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் இல்லை. இந்த பொறுப்புணர்ச்சி என்பது, வெறும் விவாதத்தை கொண்டு வருவதோடு மட்டுமல்ல. அவை நடவடிக்கை பங்கேற்பதிலும் இருக்கிறது.

பங்கிம் சந்தர் சட்டோபாத்தியா வந்தே மாதரம் பாடலை ஆனந்தமடம் என்கின்ற இதழில் தொடராக எழுதினார். இந்த பாடல் மிகுந்த புகழ் பெற்றது. உள்துறை அமைச்சர் குறிப்பிட்டதை, போல எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல 1896 ஆவது ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டில் மெட்டமைத்து பாடப்பட்டது. இந்த பாடலின் வந்தே மாதரம் எனும் இரண்டு சொற்கள், இந்தியா முழுவதும் எதிரொலித்தது விடுதலை வேட்கையை கிளர்ந்து எழ செய்தது.

இப்போது நான் சொல்ல வருவது, இந்த விடுதலை உணர்வு என்பது வெள்ளையர்களை எதிர்த்து போராடுவது என்பது, ஏதோ 20ம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்ததை போல வரலாறு எழுதப்படுகிறது. வரலாறு எழுதப்படுவதை பொறுத்துதான் அது நம்பப்படுகிறது.

தமிழகத்தில் திலகரின் பெயரால் திடலை வைத்திருக்கிறோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரால் சாலைகளை வைத்திருக்கிறோம். கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று, காந்தியினுடைய மனைவியின் பெயரால் மருத்துவமனை வைத்து இருக்கிறோம். கமலா நேரு பூங்கா என்று, நேருவின் உடைய மனைவியின் பெயரால் பூங்கா வைத்திருக்கிறோம்.

நான் கேட்கிறேன், வட மாநிலங்களில் எங்காவது வ.ஊ.சி பெயரில் சாலை உண்டா? பாரதியார் தெரு உண்டா? யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியுமா? தயவு செய்து சொல்லுங்கள். ஏன் புறக்கணிக்கப்பட்டோம்? நாங்கள் ஒரு மாநில கட்சிதான். திராவிட முன்னேற்ற கழகம், எந்த நிலையிலும் இந்த நாட்டுக்காக போராடியவர்களை கைவிட்டதுமில்லை, அடையாளம் காட்ட தவறியதும் இல்லை.

முதல் முதலாக வெள்ளையனை எதிர்த்து குரல் கொடுத்தது போராடியது நெல் கட்டு சேவல் என்று திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கிற பாளையத்தை ஆண்ட பூலித்தேவன் என்பவன்தான். முதல் முதலில் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை ஏற்படுத்தினான். சுதந்திர போராட்டத்திற்கு முன்னாடி பூலித்தேவன்.

வீரபாண்டிய கட்டபொம்மனை வடமாநிலங்கள் அறியுமா? குறைந்தபட்சம் கர்நாடகத்திலே வாழ்கிற என் நண்பர் பிரகலாத் ஜோஷி அறிவாரா? நான் வேதனையோடு கேட்கிறேன். வேலுநாச்சியாரை தெரியுமா? இழந்த பகுதியை மீட்ட ஒரே வீராங்கனை அவர்தான். அவருடைய போர் தந்திரம், பன்மொழிப் புலமை, திப்பு சுல்தான், ஹைதர் அலியின் துணையோடு அவர் எத்தனை முறை வெள்ளையர்களை எதிர்கொண்டு இருக்கிறார்.. என்பது என் தம்பி அமைச்சர் முருகனுக்கு தெரியும், உங்களுக்கு தெரியும், மற்றவர்களுக்கு தெரியுமா?

வட மாநிலத்தின் தியாகிகளை நாங்கள் அதிகம் அறிந்திருக்கிறோம். ஆனால், எங்களை பற்றிய தகவல்கள் எங்கே? குறைந்தபட்சம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலாவது சொல்லிக்கொடுங்கள்.

சோழவந்தானில் பிறந்த பத்மாசினி எனும் பெண், மதுரையிலே சீனிவாச வரதன் என்பவருக்கு வாழ்க்கை படுகிறார். அவர் தேச பக்தி உள்ளவர். அவரோடு சேர்ந்து இவர் தெருவெல்லாம் பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே போகிறார் வெள்ளையர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பத்மாசினியை சிறையில் அடைக்கிறார்கள். அந்த சமயம் இவர் கருவுற்றிருக்கிறாள். சிறையில் குழந்தை பிறக்கிறது. குழந்தை இறக்கிறது. இருப்பினும் சிறையில் இருந்து வெளியே வந்து தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரை நீங்களோ, தம்பி எல்.முருகனோ அறிவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+